சந்திரன் ஒரு இராசியை கடக்க இரண்டே கால் நாட்கள் வீதம், 12 இராசிகளையும் சுற்றி வர 28 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார். இந்நிலையில் ஒரு இராசிக்கு 8-ஆம் இடத்திற்கு சந்திரன் வரும் தினமே சந்திராஷ்டம தினம் ஆகும்.
உதாரணமாக, கும்ப இராசியில் பிறந்தவருக்கு கன்னியில் சந்திரன் வரும் தினம் சந்திராஷ்டம தினம் ஆகும். சந்திராஷ்டம தினங்கள் இருவகைப்படும். தேய்பிறை சந்திராஷ்டமம், வளர்பிறை சந்திராஷ்டமம்.
இதில் வளர்பிறையில் வரும் சந்திராஷ்டமம் தான் விபத்து போன்ற அதிக கெடுதல்களை செய்யக்கூடியது. தேய்பிறையில் வரும் சந்திராஷ்டமம் சில மன உளைச்சல்களை மட்டுமே கொடுக்கும்.
என்ன செய்யலாம்?, செய்யக்கூடாது?
சந்திராஷ்டம தினத்தில் மனம் பெரும் குழப்பத்தில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை அன்றைய தினத்தில் எடுக்கவே கூடாது. பிரயாணங்களை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. அன்று பேச்சில் அதிக நிதானம் தேவை. காரணம் இல்லாமல் மனம் கோபம் அடையும். அதிக எதிர்மறை எண்ணங்கள் அன்றைய தினத்தில் மனதில் எழும். சந்திராஷ்டம தினத்தின் தீவிரத்தை குறைக்க விரும்பினால் அன்றைய தினத்தில் வேறு நபருக்கு இனிப்பு பலகாரம் வாங்கிக் கொடுங்கள். இது ஒரு சிறந்த பரிகாரம். இதன் மூலம் சந்திராஷ்டமத்தின் கடுமை ஓரளவு குறையும்.
சந்திராஷ்டம நாட்களில் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்?
சந்திரன் எல்லாவற்றிற்கும் உரியவன். சந்திர பகவான் மனோகாரகன் எனவும் அழைக்கபடுகிறார். சந்திரன் மனசுக்கு உரியவன். நமது எண்ணம், மற்றும் செயல்களை கட்டுப்படுத்த கூடியவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது நம்மிடையே எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும். மனம் நிலையாக இருக்காது,அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சந்திராஷ்டமம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்?
சந்திராஷ்டமம் எல்லோருக்கும் கெடுத்த மட்டுமே செய்யுமா என்றால் அதுதான் இல்லை. கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது. அதற்கு காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி, ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி. எனவே அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையை மட்டுமே செய்வார்.
அதேபோல் சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி – அஸ்தம் – திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டம தினத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பொதுவாக சொல்லக் கூடாது.
சந்திராஷ்டமத்தில் இருந்து எவ்வாறு நம்மை காத்து கொள்வது?
சந்திராஷ்டம நாளில் எந்த செயலையும் ஆரம்பிக்கும் முன் நம்முடைய குலதெய்வம், நம் முன்னோர்கள், நம்முடைய இஷ்டதெய்வம் ஆகியோரை வணங்கிவிட்டு ஆரம்பிப்பது மிகவும் நல்லது. இப்படிச் செய்தால் நாம் தொடங்கும் எந்த காரியத்துக்கும் தடங்கல் ஏற்படாது.