ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் நீராட்ட உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மார்கழி பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இத் திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் பட்டர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பில் சுதர்சனம் தலைமையில் வரவேற்றனர்.
அங்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து அரையர் வியாக்கியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.