அறுபடை வீடுகளில், ஒன்றான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 17-ந் தேதியும், தைப்பூச தேரோட்டம் 18-ந்தேதியும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவர்.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பு பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பலர், சாமி தரிசனம் செய்வதற்காக பஸ் ஏறி பழனிக்கு வந்தனர். இதனால் நேற்று பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, மலைக்கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தரிசன பாதைகளை கடந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாட்டால், வார இறுதி நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நேற்று பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பஸ் ஏறி வந்தனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சங்கர் கூறுகையில், கடந்த 11-ந்தேதி திருமங்கலத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டோம். ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். தருமத்துப்பட்டி வரை பாதயாத்திரையாக வந்த நிலையில், அரசின் இந்த திடீர் அறிவிப்பால் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக நேற்று தருமத்துப்பட்டியில் இருந்து பஸ் ஏறி பழனிக்கு வந்தோம்.பின்னர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். எனவே தைப்பூசத் திருவிழா நடைபெறுமா?, அதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பதை விரைவில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் பக்தர்கள் ஏமாற்றம் அடைவர் என்றார்.