அவிநாசி சேவூர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கி, நேற்று பாலாலயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. நடுச்சிதம்பரம் என்று போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் செப்டெம்பர் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விநாயகர், வாலீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, சுப்பிரமண்யர் ஆகிய பிரதான மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தன.
அவினாசி அருகே கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும் சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.மேலும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் கடந்த 2004-ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பது ஐதீகம். இதையடுத்து கும்பாபிஷேக திருப்பணி தொடங்கும் பொருட்டு செயல் அலுவலர் இரா.சங்கரசுந்தரேஸ்வரன் முன்னிலையில், பாலாலயம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி காலகர்ஷனம், கும்ப அலங்காரம், ஹோமம் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு வேதபாராயணம், வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, தர்பணத்தில் (கண்ணாடியில்) கலைகளை ஆவாகனம் செய்தல், நிகழ்வுகள் நடைபெற்று
மஹாதீபாராதனையும், அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோவில் உருவான வரலாறு:
கோ” என்றால் பசு, அதே போல் “சே” என்றால் மாடு என்று பொருள். அதனால், சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும் “மாட்டூர் அரவா” என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி (மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம்.
சோழர்களின் புகழ்பெற்ற அரசன் “கரிகாலன்” தான் இழந்த சோழநாட்டை, சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை (கோனாட்டை) கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
https://youtube.com/shorts/jE2gZ3I39N0?si=g9VR_WmscyeQLdZ7
இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை வென்றவன். இராவணனோ எமனை வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி. மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான்.
இருவரும் அவனை துரத்தி சென்ற போது வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து “தம்பி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்” என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.
வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ஆனால், அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம் சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர், நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும். அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம் அனைத்தும் நீங்கும் என்று அருளினார்.
அது போல வாலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும் என்றும் உபதேசம் செய்தனர். அவ்வாறு வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவர் கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். மேலும் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம் திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை உணரலாம்.