கைலாயத்தில் ஒரு சமயம் பார்வதி தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. இதன் காரணமாக, சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். மீண்டும் சிவனை அடைய, மாங்காடு வந்த அம்பிகை, அக்னியின் மத்தியில், இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று தவமிருந்தாள். சிவனை அடைவது ஒன்றே அவளது விருப்பமாக இருந்ததால் “காமாட்சி’ என்று பெயர் பெற்றாள். “காமம்’ என்றால் “விருப்பம்’. காஞ்சிபுரம் சென்று தவமிருக்கும் படி சிவனின் உத்தரவு கிடைக்கவே, அங்கு சென்று தவமிருந்து சிவனை அடைந்தாள். அவள் முதலில் தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு “ஆதி காமாட்சி தலம்’ எனப்படுகிறது. மாமரம் தல விருட்சமாக உள்ளது. இத்தலத்திற்கு சூதவனம் என்றும் பெயருண்டு.
ஸ்ரீசக்ர வழிபாடு: இக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்ரத்தையே அம்பாளாக கருதி வணங்குகின்றனர். அம்பாள் காஞ்சிபுரம் சென்ற போது, தான் தவமிருக்க மூட்டிய அக்னியை அணைக்காமல் சென்று விட்டாள். இதனால் மாங்காடு வெப்பம் தாங்காமல் வறண்டது. இதையறிந்த ஆதிசங்கரர் அஷ்ட கந்தம் எனப்படும் எட்டுவகை மூலிகையால் ஆன ஸ்ரீசக்ரத்தை அம்பிகை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வெம்மையை அதனுள் அடக்கினார். பிறகு வெம்மை தணிந்து இத்தலம் சுபிட்சம் அடைந்தது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. 43 திரிகோணம் கொண்ட இந்த சக்ரத்திற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இந்த சக்ரத்தை “அர்த்தமேரு ராஜ யந்திரம்’ என்றும் சொல்வர். ஆமையின் உருவத்தை அடித்தளமாக்கி, அதன் மேல் மூன்று படிக்கட்டு அமைத்து, அதற்கு மேல் 16 இதழ் தாமரையும், அதற்கு மேலே 8 இதழ் தாமரையும் அமைத்து, அதற்கும் மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது. இதைப் போல சக்தி வாய்ந்த வேறெங்கும் ஸ்ரீசக்ரம் இல்லை. இதற்கு 18 முழப் புடவை அணிவிக்கப்படுகிறது.
தினமும் தங்கத்தேர்: திருமண வரம் பெற விரும்பும் பெண்கள், அம்மனிடம் வேண்டிக் கொள்கின்றனர். புத்திர பாக்கியம் பெற அம்மனுக்கு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆறு வெள்ளிக்கிழமை தொடர்ந்து வந்து அம்மனை தரிசித்தால் நினைத்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். தினமும் மாலையில் இங்கு தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும் உலா வருகின்றனர். சப்த மாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச் சுற்றிலும் நவகன்னியர் உள்ளனர். மகாமண்டபத்தின் நடுவில் அணையா விளக்கு இருக்கிறது. இதற்கு இடப்பக்கத்தில் “தபஸ் காமாட்சி’ சன்னிதி உள்ளது.
வெள்ளீஸ்வரர் கோவில்: ஒரு காலத்தில் மாமரங்கள் அடங்கிய பகுதியாக விளங்கியதால், இவ்வூர் மாங்காடு என்று பெயர் பெற்றது. காமாட்சி கோவிலில் இருந்து சற்று தூரத்தில் வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. சுக்கிரனுக்கு வெள்ளி என்று பெயருண்டு. நவக்கிரக கோவிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோவில் போல, சுக்கிரனுக்கு முக்கியத்துவம் கொண்டது. மாங்காட்டில் காமாட்சிக்கு முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னிதி கிடையாது. அவளது பாதம் மட்டும் இருக்கிறது.
இருப்பிடம்: கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தாம்பரத்திலிருந்து 22 கி.மீ.,
நேரம்: காலை 6.00 – மதியம் 1.30 மணி, மாலை 3.00- இரவு 9.30 மணி, ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று பகலில் நடை அடைப்பதில்லை.