காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 1200 ஆண்டுகால தொன்மைப் புகழ்மிக்க திருமயம்…
நூற்றாண்டுகள் பல கடந்தும் அழியாத கலைச் சின்னமாய், இன்றும் புதியனவாகத் திகழ்பவைகளில் ஒன்று திருமயம் கோட்டை.
அதுவும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவாக்கி வைக்கப்பட்ட பல குடைவரைக் கோவில்கள் சரித்திரச் சின்னங்கள் ஒருங்கே அமையப்பெற்ற ஊராக அன்றும், இன்றும் திகழ்ந்து வருகிறது “திருமயம்’.
“திருமெய்யம்’ காலத்தால் மருவி, திருமயம் என்ற பெயராகி நம்மால் அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் “உண்மையின் இருப்பிடம். வடமொழியில் இவ்வூர்
“சத்திய ஷேத்திரம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கி.பி.16-17ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி இருந்தது. அந்த வேளையில், இராமநாதபுர சமஸ்தானத்தின் வடக்கு எல்லைப் பகுதியாக திருமயம் விளங்கியது. சேதுபதிகளின் மேலாண்மைக்கு உட்பட்டு பல்லவராயர்கள் எனும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.
கி.பி.1673-1708-இல் இராமநாதபுரத்தை ஆண்ட விஜய இரகுநாதத் தேவர் 40 ஏக்கர் சுற்றளவில் ஏழுச் சுற்று மதில்களுடன் கருங்கற்களால் பிரமாண்டமான கோட்டை ஒன்றை இங்கே கட்டி வைத்தார். பின்னர் சேதுபதி மன்னருக்கும், புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையினருக்கும் திருமண உறவுகள் ஏற்பட்ட காரணத்தால், பல்லவராயர்களின் கையிலிருந்த திருமயம் பகுதி அரசுரிமை தொண்டைமான் மன்னர்களின் ஆளுகைக்கு மாறிப் போனது.
ஏழு வட்டவடிவிலான மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாகக் கொண்டு பிரமாண்ட முறையில் கட்டப்பட்டிருந்த இக்கோட்டையில் தற்போது நான்கு மதில் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டையின் அமைப்பு வட்ட வடிவமானதாகும். இவ்விதமாக அமைந்த கோட்டையை “பத்மகக் கோட்டை’ என்று அழைக்கப்படும். வெளிச்சுவரைச் சுற்றி ஆழமான அகழி உண்டு.
இன்றும் கோட்டையின் வடக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் கம்பீரமான நுழைவு வாசல்கள் உள்ளன. வடக்கு வாசல் காவல் தெய்வமாக பைரவரும், தெற்கு வாசலில் அனுமன், சக்தி, கணபதி ஆகியோரும். தென்கிழக்கில் முனீஸ்வரரும் காவல் தெய்வமாகக் காத்து நிற்கின்றனர். அந்தக் காலத்தில் ஒரு கம்பீரமிக்க கோட்டையின் கட்டுக்காவல் தாண்டி உள்ளே நுழைகிற உணர்வே இதைக் காணுகையில் நமக்கும் ஏற்படுகிறது.
காரணம், அன்றையக் காலகட்டத்தில் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எத்தகைய பாதுகாப்பு அம்சங்களோடு கோட்டை கொத்தளங்கள் விளங்கியிருந்தன என்பதை இன்றும் நாம் கண்கூடாகக் காண்பதற்கு திருமயம் கோட்டை ஓர் அற்புதமான வரலாற்று ஆவணமாக நம் முன்னே நிற்கிறது.
அதனைச் சுற்றிலும் மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. உள்கோட்டையின் கருங்கல் மதிலைச் சுற்றி மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கற்களால் ஆன கைப்பிடிச் சுவற்றில் ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும், ஆட்கள் மறைந்து கொள்ளவும் இடைவெளிகள் காணப்படுகின்றன. உள் கோட்டைக்கு மேலே செல்லும்போது 100 டன் எடை அளவு இருக்கும் ஒரு தனிக்கல்லில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குன்றில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் வரைந்த மூலிகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதன் தெற்குப் பகுதியில், கருங்கற்களால் கட்டப்பட்ட பெரிய அறை ஒன்று உள்ளது. அது போர்த்தளவாடங்கள் வைக்கும் பாதுகாப்பு அறையாக அக்காலத்தில் பயன்படுத்தப்
பட்டது.
எதிரே, குன்றின் மேற்குச் சரிவில் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் மிக உன்னதமான கலை நேர்த்தியில் குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக் குடைவரைக் கோவிலும், தெற்குச் சரிவில் அமைந்துள்ள சிவன், விஷ்ணு குடைவரைக் கோவில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
கோட்டையின் மேல் 20 அடி உயரமுள்ள பிரத்யேக கருங்கல் மேடையில் பீரங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆறு பீரங்கிகள் இக் கோட்டையின் வடக்கு, தெற்கு, கிழக்கு நுழைவாயில்களில் வைக்கப்பட்டுள்ளன. இதற்குத் தென்புலம் மழை நீரைத் தேக்கி வைக்கக்கூடிய மாதிரி சிறு குட்டை ஒன்றை அமைத்துள்ளனர். இங்கே தங்கியிருக்கும் காலங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பெரிய குட்டை கோட்டையின் வடபுறம் உள்ளது. இவற்றால், மாதக்கணக்கில் இதன் உள்ளே இருப்பவர்கள் குடிநீருக்காக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
கி.பி. 1708-இல் விஜய இரகுநாதத் தேவர் காலத்திற்குப் பின், சேதுபதி தாண்டத்தேவன் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விஜய இரகுநாதத் தேவரின் மகன் பவானிசாகர் என்பவருக்கும் தாண்டத்தேவனுக்கும் இடையே அரசுரிமை யாருக்கு என்பதில் போர் ஏற்பட்டது.
இந்த அரசுரிமைப் போரில் புதுக்கோட்டைத் தொண்டைமான் மன்னர் இரகுநாதராயத் தொண்டைமானின் உதவியால் தாண்டத்தேவன் வெற்றிபெற முடிந்தது. இந்த வெற்றிக்கு நன்றி காணிக்கையாக தாண்டத் தேவன் திருமயம் கோட்டையை தொண்டைமான் மன்னருக்கு சன்மானமாக வழங்கினார். எனவே, கி.பி. 1723-ஆம் ஆண்டுமுதல் திருமயம் கோட்டை தொண்டைமான் மன்னர்களின் பொறுப்பில் வந்தது.
கி.பி.1800-ஆம் ஆண்டு வாக்கில், புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயருடன் சுமுக உறவு வைத்திருந்த காரணத்தால் திருமயம் கோட்டையை ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருந்தார்.
கி.பி. 1875-ஆம் ஆண்டிலிருந்து கொடிய குற்றம் புரிந்தவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக இக்கோட்டை திகழ்ந்தது.
இக்குன்றின் தெற்குச் சரிவில் அதி அற்புதமான கலைக் கோவிலாக “சத்தியகிரீஸ்வரம்’ எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில்.
இந்தக் கோவில்களுக்கு சற்று உயரே வேணுவனேஸ்வரி அம்மன் சந்நிதி உள்ளது. இதனையடுத்து கிழக்கு பார்த்தவண்ணம் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் உள்ளது. மூலவராக ஆவுடையார் கோலத்தில் லிங்கத் திருமேனி அமைந்துள்ளது.
கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கமாய் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரெங்கநாதர் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கம் திருத்தலத்தைவிட இத் திருத்தலம் காலத்தால் முந்தியது.
தென்பாண்டி மண்டலத்தின் 18 பதிகளில் இதுவும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. குகைக் கோவிலில் விஷ்ணுப் பெருமான் “திருமெய்யர்” என்கிற நாமத்தில் அனந்த சயன மூர்த்தியாகக் கண்கொள்ளா அற்புதப் பேரழகாகக் காட்சியளிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குகைக் கோவில்களில் இதுவே அளவில் பெரியது. அனந்த சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார்.
அனந்த சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடித்திருக்கிற இந்தச் சிற்ப வேலைப்பாடு வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்தக் குடைவரைக் கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி, விஸ்வக்சேனர், இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
இக் கோவிலின் கிழக்குப் பக்கம் முற்றிலும் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள எண்கோண வடிவ தெப்பக் குளம் நம் கவனத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
இவ்வாறு 1200 ஆண்டுகள் தொன்மைப் புகழ் மிக்க ஊராக திருமயம் சீரோடும், சிறப்போடும் இன்று விளங்கி வருகிறது. சரித்திரம் சொல்லும் இங்குள்ள கலைப் படைப்புகள் தமிழினத்தின் நாகரிக வாழ்வை விளக்கி நிற்கும் ஆவணங்கள் என்றால் அது மிகையாகாது.
குறிப்பு : தீரர் சத்திய மூர்த்தி பிறந்த ஊர்.புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது. வரலாற்றுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படும் இக்கோட்டை திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
நுழைவுக் கட்டணம்: இந்தியர்கள்: 5/- ரூபாய்; வெளிநாட்டவர் 100/- ரூபாய். புகைப்படம் எடுக்க: 25/- ரூபாய்; வீடியோ எடுக்க 100/- ரூபாய்.