மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு, துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர், ஐந்து தங்க அம்புகளை எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால் பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். இந்த அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார். ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத துரியோதனன், அந்த அம்புகளைத் தன்னிடம் தாருங்கள் நான் அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று அந்த அம்புகளைக் கேட்கிறார்.
மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால், பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போது பாண்டவர்கள் தங்கியிந்த இடத்திற்கு எதிரில் உள்ள குளத்தின் அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தார். ஒரு முறை துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர் மற்றும் கந்தர்வர்களும் கீழே வந்தனர். அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது. இதில் துரியோதனனைக் காக்க அர்ஜுனன் போரிட்டு துரியோதனனைக் காப்பாற்றினார். இதில் துரியோதனன் நாணம் கொண்டார். ஆனால், அவர் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ஜுனனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அர்ஜுனன் அதை மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.
அர்ஜுனன் தன் வரத்தைக் கேட்கிறான்…
மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில், பீஷ்மர் துரியோதனனிடம் தங்க அம்புகளை அளித்த அந்த இரவில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி, துரியோதனனிடம் இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார். அர்ஜுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால், துரியோதனன் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் தான் ஒரு சத்திரியன் என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக் கொண்டார். பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார் கூறமுடியும் என்றார். பின்பு, துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினார். இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம் சாத்தியமில்லாதது ஒருமுறை மட்டுமே அதனை பெறமுடியும் என்றார் …
பஞ்ச பாண்டவர்களை வெல்ல முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என கிளை கதைகள் கூறுகின்றன..