முதல் நாளில் தனது படையினருக்கு ஏற்பட்ட பயத்தினை போக்கும் முயற்சியில் இறங்கினான், பாண்டவர் அணியின் தலைமைப் படைத்தலைவன் திருட்டத்துயும்னன் (திரௌபதியின் சகோதரன்). மிக்க கவனத்துடன் வழிமுறைகளை தனது படையினருக்கு விளக்கி, துணிச்சலும் உற்சாகமும் ஊட்டினான். அன்றைய தினத்தின் தொடக்கத்திலும் பாண்டவர் படையை கௌரவர் படை பலமாகத் தாக்கியது. இதைக்கண்ட அர்ஜூனன், தனது தேரோட்டியான கிருஷ்ணனிடம் பீஷ்மரை நோக்கி தேரை செலுத்துமாறு கேட்டுக் கொண்டான். இதனைத் தொடர்ந்து பீஷ்மருக்கும் அர்ஜூனனுக்கும் இடையே போர் தொடங்கியது. இருவரில் யாரும் வெல்ல முடியாமல் வெகுநேரம் போரை நடத்தினார்கள். இப்போரைக் காண தேவர்களும் கந்தர்வர்களும் வந்துவிட்டதாக வியாசர் எழுதியிருக்கிறார்.
அர்ஜூனன் அன்று காட்டிய வீரத்தால் கௌரவர் படை பெருத்த சேதமடைந்தது. முதல்நாள் போரில் பாண்டவர்கள் பயந்ததைப் போன்று இரண்டாவது நாள் முடிவில் கௌரவர்கள் மனக்கலக்கத்தை அடைந்தார்கள்…
போர்க்களம் தொடரும்