நாம் தானமாக பெற்ற, சில பொருட்களை, எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்களால் சொல்லியிருக்கிறார்கள். சுமங்கலிப் பெண்கள் சுப விசேஷங்களில், கலந்து கொண்டால், அவர்களுக்கு தானமாக சில பொருட்களை கொடுப்பார்கள். நம் வீட்டு சுப விசேஷங்களில் வந்து கலந்து கொள்ளும் பெண்களுக்கு, மங்களகரமாக வெற்றிலை, பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி, வளையல் இப்படி பலவிதமான பொருட்கள் தானமாக வழங்கப்படும். இந்த பொருட்களை எல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
பொதுவாகவே, நம் வீட்டு விசேஷங்களில் வந்து கலந்து கொள்ளும் பெண்கள், நன்றாக இருக்க வேண்டும் என்பதை எண்ணித்தான், அவர்களுக்கு மங்கலகரமான பொருட்களை தானமாக வழங்குகின்றோம். அந்த மங்களகரமான பொருட்களில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இந்த பொருட்களை தானமாக பெற்ற பின், சின்ன சின்ன தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் இவைகளை தானமாகப் பெற்றால், வாங்கிய இடத்திலேயே மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இல்லை என்றால், அவர்களுடன் வந்தவர்களுக்கு தானமாக இதையும், ‘நீயே வைத்துக்கொள்’ என்று கொடுத்துவிடுவார்கள்.
நீங்கள் தானமாக வாங்கிய மங்களகரமான பொருட்களை, எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிற்கு எடுத்து வராமல், அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது. அது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்து தரப்பட்ட ஒரு பொருள். அதை உங்கள் வீட்டிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். வீட்டிற்கு எடுத்து வந்து, பூஜை அறையில் வைத்து விட்டு, அவர்கள் தந்த பூவை கொஞ்சம் தலையில் சூடிக்கொண்டு, மஞ்சளை உங்கள் வீட்டு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துங்கள். அந்த மஞ்சளை இழைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். இல்லை என்றால், சுவாமி படங்களுக்கு வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டிற்கு கொண்டு வந்த வெற்றிலை பாக்கை, உங்கள் வீட்டில் இருக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள பாட்டிகளுக்கு கொடுப்பதில் ஒன்றும் தவறில்லை. வீட்டு வாசலுக்கு உள்ளேயே கொண்டுவராமல், வரும் வழியிலேயே, அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்காதீர்கள். அடுத்தது ரவிக்கைத்துணி. நிறைய பேர் ரவிக்கைத் துணியை மங்களகரமான காரியத்திற்கு, சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுப்பார்கள். வீட்டில் சுமங்கலி பூஜை வைத்தாலும், தானமாக கொடுப்பார்கள். சிலரது வீட்டில், தானமாக பெற்ற ரவிக்கைத்துணி நிறைய சேர்ந்திருக்கும். இப்படி, அடுத்தவர்கள் உங்களுக்கு தானமாகக் கொடுத்த ரவிக்கைத் துணியை, எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் உறவினர்களுக்கு, வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்தோடு சேர்த்துவைத்து தானமாக கொடுக்க கூடாது. நீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுக்க கூடிய ரவிக்கைத்துணி, கைக்காசை போட்டு, கடையிலிருந்து வாங்கிய ரவிக்கைத்துணி ஆகத்தான் இருக்க வேண்டும். நீங்கள், தானமாகப் பெற்ற ரவிக்கைத் துணியை, உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால், ரவிக்கைத்துணி நிறைய இருக்கிறது என்றால், ‘கஷ்டப்படுபவர்களுக்கு, இனாமாக கொடுக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. உங்கள் வீட்டுக்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு தானமாகத்தான் வைத்து கொடுக்கக் கூடாது.’ என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தானமாக வாங்கிய பொருட்களை, தானமாக கொடுத்துவிட்டால் ஏதாவது விபரீதமாக நடந்து விடுமோ என்றெல்லாம் பயப்பட வேண்டாம். அடுத்தவர்கள் ஆசிர்வாதம் செய்து கொடுத்த பொருட்களின் மூலம் நமக்கு கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த அதிர்ஷ்டத்தை எடுத்து எதற்காக நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது அடுத்தவர்களால் ஆசீர்வாதம் செய்து தரக்கூடிய, ஒரு ரூபாய் நாணயமாக இருந்தாலும், அதை செலவு செய்யாமல் உண்டியலில் சேர்த்து வாருங்கள்! அந்த காசை வைத்து ஒரு மங்களகரமான பொருளை வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள்! அது கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருளாக மாறும். நேர்மறை ஆற்றல் நிறைந்த எந்த ஒரு பொருளுக்கும், அதிர்ஷ்டம் தரக்கூடிய சக்தி அதிகமாகவே இருக்கும் என்பதுதான் இதற்கு அர்த்தம். மனதார அடுத்தவர்களது கையால் ஆசீர்வாதம் செய்யப்பட்டு, உங்கள் கைக்கு வந்த எந்த பொருட்களையும், நீங்கள் அடுத்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொடுக்கவே கூடாது. அதில், உங்களுக்கான பலன், உங்களை வந்து சேராது அவ்வளவு தான்.