வீர அபிமன்யு வீழ்ச்சி… அர்ஜுனனின் சபதம்…
போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் காத்திருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் அவன் சாரதியாகிய கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது. இருப்பினும் எதை இழந்தாலும் அஸ்தினாபுரத்தின் சிம்மாசனம் ஒன்றின் மீதே இருந்தது அவன் குறிக்கோள்.
இன்று துரோணரின் குறிக்கோள் அர்ஜுனன் மற்றும் அபிமன்யு. அர்ஜுனனின் பாசத்திற்குரிய மகன் அபிமன்யு என்பதை அறிந்திருந்தார் துரோணர். அபிமன்யுவை கொன்றுவிட்டால் அர்ஜுனனின் போர் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று கணக்கிட்டார். அபிமன்யுவிர்க்கு ஆபத்து என்றால் அர்ஜுனன் வந்து அவனை காபாற்றிவிடுவான், எனவே அர்ஜுனனை திசை திருப்ப திட்டம் தீட்டினார். சம்சப்தர்கள் என்னும் ஏழு சகோதரர்களையும், எட்டாயிரம் வீரர்களையும், மூன்று யானை படைகளையும் அர்ஜுனன் மீது ஏவினார்.
அவர்கள் மேற்கு திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விடுத்தனர். சவாலை ஏற்ற அர்ஜுனன் தன் சாரதியை மேற்கு நோக்கி ரதத்தை செலுத்த சொன்னான். நடக்க இருப்பதை அறிந்திருந்த பரமாத்மாவோ மௌனம் சாதித்தார். பின்பு அர்ஜுனனை நோக்கி “ பார்த்தா, வீரம் என்பது போர்களத்தில் கொன்று குவிப்பது மட்டும் அல்ல, எத்துனை இழப்பு வந்தாலும், துவளாமல் இறுதி இலட்சியத்தை அடைவது தான் உண்மையான வீரம்” என்றார் தலை குனிந்தவாறே. #பார்த்தனுக்கு அது அப்போது புரியவில்லை என்றாலும், நிச்சயம் இலட்சியத்தை அடைவேன் என்று வாக்களித்து போருக்கு தயாரானான். பின்பு மேற்கு நோக்கி பயணிதான். அர்ஜுனனை திசை திருப்பிய துரோணர் தன் வியூகத்தில் பாதி வென்றார். அடுத்த கணம் துரோணர் பத்மவியூகம் அமைத்தார்.
முகப்பில் அவர் இருந்து தலைமை தாங்கினார். துரியோதனன் பத்மவியூகத்தின் நடுவில் நின்றான். கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன், துச்சாதனன், துஷ்ப்ரதர்ஷன், துஸ்ஸலன், அனுவிந்தன், உபசித்ரன், சித்ராக்ஷன் உட்பட 76 வீரர்களும், நூற்று கணக்கான காலாட்படை வீரர்களும் பத்மவியூகத்தின் சுவர்களாக நின்றனர்.
பத்மவியூகம் என்பது ஒர்புள்ளி தொடர் சுழல் போன்றதாகும் (#Spiral #appearance) . பத்மவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது கடினம். மீறி உள்ளே சென்று வெளியே வந்து விட்டால் வியூகத்தை வென்று விட்டதாக அர்த்தம். உள்ளே செல்வதை விட வெளியே வருவது நூறு மடங்கு சிரமம். ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு அல்லது மூன்று மகாரதர்கள் இருப்பர். அவர்களுக்கு துணையாக அவர்களின் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். வியூகத்தின் மத்திய புள்ளிக்கு சென்றுவிட்டால், எந்த திசையில் இருந்தும், யார் வேண்டுமென்றாலும் தாக்க கூடும். எப்பக்கத்தில் இருந்து அம்பு பாய்கிறது, யார் ஈட்டி எறிகிறார்கள், யார் போர்வாள் சுழற்ருகிரார்கள், கதாயுதம் எங்கிருந்து வரும், யார் தாக்குவார்கள், இவை எதையுமே யூகிக்க முடியாது. பத்மவியூகத்தை உடைக்க அசாத்திய ஆற்றல் வேண்டும்.
வியூக அமைப்பை கண்ட தருமர் கலக்க முற்றார்.
அபிமன்யூவிடம் ஒரு தனி ஆற்றல் இருந்தது. அவனால்..பத்மவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லமுடியும். இந்த ரகசியத்தை அவன் தன் தாயின் கருவில் இருக்கும் போதே கற்றிருந்தான். உள்ளே நுழையும் பயிற்சியைப் பெற்றிருந்த அபிமன்யூ வெளியே வரும் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. ஆயினும் அபிமன்யு வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் போது, அவனுக்குத் துணையாக பல்லாயிரக் கணக்கில் வீரர்களும் பீமனும் சுலபமாக உள்ளே நுழைத்து விட்டால் வியூகத்தை எளிதில் உடைத்து விடலாம் என்று தருமர் எண்ணினார்.
எதற்கும் அஞ்சாத பாலகன் அபிமன்யு வியூகத்தை உடைத்து வெற்றி கொள்வேன் என்று தானாக முன் வந்தான். பதினாறே வயதான அபிமன்யூவின் துணிச்சலை கர்ணன் மட்டும் அல்ல துரியோதனனும் கண்டு வியந்தான். தன் முதல் அம்புவிலேயே தலையாய் நின்ற துரோணரின் வில்லை முறித்தான். வியூகத்தின் வாயிலை உடைத்தான். சிங்கமென கர்ஜித்தான். அக்கினி ஆற்றை போல் உள்ளே நுழைந்தான் அபிமன்யு. அவன் கண்களில் மினல்கள் தரித்தன. அவன் எழுப்பிய போர்க்குரலில் இடியும் பின்வாங்கியது. அவனின் ரத ஓட்டம் புயலை #உண்டாகியது என்றால் அது மிகையாகாது. பயமின்றி துணிச்சலாக உள்ளே சென்று தாக்கினான். ஆனால் மற்ற வீரர்கள் உள்ளே செல்லும் முன் ஜயத்ரதன் தன் மாய சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். யாரையும் உள்ளே நெருங்க விடவில்லை. தனிமை படுத்தபட்டான் அபிமன்யு.
மனம் தளரவில்லை அபிமன்யு. பீஷ்மனுக்கு இணையான வில்லாளி ஆயிற்றே!!! எட்டு திசையிலும் அம்புகளை சீற்றினான். #கர்ணனின் குதிரைகளை காயப்படுத்தினான். துரியோதனனின் மகுடத்தை மண்ணில் தள்ளினான். துச்சாதனனின் தேரை முறித்தான். அஸ்வதாமனை கதை கொண்டு விரட்டினான். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் மாபெரும் போர் வீரர்களுடன் பதினாறே வயதான அபிமன்யு தனித்து நின்று போரிட்டான். அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் “இவன் வீரத்தில் அர்ச்சுனனைவிட சிறந்து காணப்படுகிறான்” என்று வியந்து பாராட்டினார். இதைக் கண்ட துரியோதனன் “எதிரியை புகழும் நீர் செய்வது நம்பிக்கைத்துரோகம். இதனால் நம் படையின் உற்சாகம் குறையும்” என்று எச்சரித்தான்.
அவனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் #துரோணர். எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி. அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான். பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யூ திரும்பி பார்த்தபோது, துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வில்லை துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான்.
மாவீரன் அபிமன்யூ குதிரையையும், வில்லையும், வாளையும், கேடயத்தையும் இழந்தாலும் வீரத்தை இழக்கவில்லை. ஒரு கதாயுதத்தைக் கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான். பல வீரர்களைக் கொன்றான்.
முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று, பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன், பாண்டவர்களை பழிதீர்த்துச் சிவனை நோக்கித் தவம் செய்து, அர்ச்சுனனைக் கொல்ல இயலாது எனினும் ஒரு நாளாவது மற்ற நான்கு பேர்களை சமாளிக்கக்கூடும் என்னும் #வரத்தை பெற்றிருந்தான். அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. பீமன், நகுலன், சகாதேவன், தருமர் ஆகியோர் அபிமன்யூவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர், கிருபர், கர்ணன், ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது.
துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப்பாகனை கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம், அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. ஆனால் எதற்கும் தளராத அபிமன்யூ, வாளைக் கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உடம்பெல்லாம் புண்ணாகி, குருதி ஒழுக, நிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும், அதர்மயுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். ஆயுதம் இல்லை என்றால் என்ன? அபிமன்யூவின் வீரம் இன்னும் மிச்சம் இருக்கிறதே. உடைந்த தன் தேரில் இருந்து தேர்சக்கரத்தை கையில் ஏந்தினான். கேடயமாக பயன் படுத்தவில்லை. ஆயுதமாக கொண்டு மீண்டும் தாக்க ஆரம்பித்தான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் தாக்கினான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கி, அபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும், உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். கையில் ஆயுதமும் இன்றி துணைக்கும் யாருமின்றி போர் செய்த சிங்கக்குட்டியை, மாவீரனான அபிமன்யூவை, நரிகள் ஒன்று சேர்ந்து கொன்றது. வீரமரணம் எய்தினான் அபிமன்யு. சரித்திர நாயகன் ஆனான். சொர்க்கம் அவனை வரவேற்றது. மரண தேவன் கூட அவன் உயிரை எடுக்க சில கணம் தயங்கினான் என்கிறது மஹாபாரதம். தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ச்சுனன் காதில் இச் செய்தி விழ, அவன் மயங்கி விழுந்தான். கண்ணனின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன், மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்தான்.பின் “ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமணத்திற்குள் கொல்வேன், தவறினால், அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கண்ணன் மீது ஆணை !” என்று சபதம் செய்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான். அவ்வொலிக் கேட்டு அண்ட சராசரமும் அதிர்ந்தன. பூமி நிலை குலைந்தது.
இந்நிலையில் ஆதவன் மேற்கில் மறைய …..அன்றையபோர் நிறைவுப் பெற்றது……
(தொடரும்)