பதினான்காம் நாள் போர் இரண்டாக பிரிக்க்கப்பட்டது பகல்போர் மற்றும் இரவுபோர்…..
பகல் போர் – ஜயத்ரதன் வீழ்ச்சி.
அர்ஜுனனின் சபதம் குருக்ஷேத்ரத்தின் போக்கை மாற்ற கூடியது. பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது வரையறுக்கப்பட்ட விதிமுறை. அர்ஜுனன் தன் சபதத்தில் தோற்றால் அக்னிப்ரவேசம் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் குருக்ஷேத்ரம் முடிவிற்கு வந்து விடும். அதர்மம் வென்றதாக அர்த்தம். விடுவாரா கிருஷ்ணர்? இயக்குனரும் அவரே, இயங்குபவனும் அவரே !!!! அன்றும் அவர் லீலை தொடர்ந்தது….
அர்ஜுனனின் சபதம் ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன், போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர். அர்ஜுனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். அதற்கேற்ப சகடவியூகம் மற்றும் மகர வியூகம் என வியூகங்களை வகுத்தார். துரியோதனனின் திட்டம், ஒன்று ஜயத்ரதனை அன்று மாலை வரை தன் முழு படைபலம் கொண்டு காக்க வேண்டும். அல்லது அன்று மாலை வரை அவனை மறைத்து வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அர்ஜுனன் சபதத்தில் தோர்ப்பான். அர்ஜுனனை எதிர்த்து போரிடுவதை விட ஜயத்ரதனை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தனர்.
ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து “ நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் விற் பயிற்சி அளித்தீர், ஆனால் அர்ஜுனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன்? ” என்றான். அதற்கு துரோணர், ”அர்ஜுனன் தவ வலிமை உடையவன் ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டும்மல்ல, கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே. ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கிறார். மற்றவர் விதுரர். அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. எனவே இந்த குருக்ஷேத்ரத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன். மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு மட்டும் சாரதி அல்ல, போர்களத்தில் அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் அவரே சாரதி ‘” என்றார்.
ஆதவன் வெள்ளி பட்டாடை உடுத்தி பிரகாசமாக தகித்தார்… சங்கு முழங்கியது… கண்ணன் தேரை ஓட்ட, கண்கள் சிவக்க, மனதில் வெறி கொண்டு, மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க காண்டீபத்துடன் உள்ளே வந்தான் பார்த்தன். அனுமக்கொடியுடன் ஆக்ரோஷத்துடன் போர்க்களத்தில் நுழைந்தான் அர்ஜுனன். துரியோதனன் தன் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ஜுனனை நோக்கி அனுப்பினான். நேற்று அபிமன்யூவின் வீரத்தை கண்டு, அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீலாத துர்மர்ஷணன், அபிமன்யூவின் தந்தையான அர்ஜுனனை கண்டு புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ஜுனனை எதிர்த்தான். பின் பார்த்தனை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்று கௌரவ பாசறைக்கு திரும்பினான். துரோணர் அர்ஜுனனை தடுத்து போரிட்டார். துரோணரை அவன் பொருட்படுத்தவில்லை. எனினும் அவனை தடுக்க வேண்டாம் என்ற செய்தியை உணர்த்த அவருக்கு தன் தாக்குதலின் வலிமையை காண்பித்தான்.
துரோனருடனான அவன் போர் நிலைக்கவில்லை. ஏனெனில் அர்ஜுனனுக்கு அன்றைய இலக்கு ஜயத்ரதன்.
துரியோதனன் துரோணரை பார்த்து “ அர்ஜுனனை உங்களால் தடுக்க முடியவில்லை. நீங்கள் படை தளபதியாக இருக்க தகதி அற்றவர் ” என்று கடுமையாக சாடினான். அதற்க்கு துரோணர் “துரியோதனா என் திட்டம் என்ன தெரியுமா? அர்ஜுனனை, ஜயத்ரதனை தேடி வேறு பக்கம் போக வைத்தால், தருமரை பிடித்து விடலாம். என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் இருக்கிறது. உனக்குத் தருகிறேன். அதை யாரும் பிளக்க முடியாது. முன்னர் சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார். அவன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான். அவர் தன் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார். பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார். அவர் எனக்குத் தந்தார். அதை உனக்கு நான் தருகிறேன். இனி உனக்கு வெற்றியே. போய் அர்ச்சுனனுடன் போரிடு “ என்றார்.
மகிழ்ச்சியுடன் அக்கவசத்தை அணிந்து அர்ஜுனனைத் தாக்கினான் துரியோதனன். அர்ஜுனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை. அதிர்ந்தான் பார்த்தன். என்ன செய்வது என்று கிருஷ்ணரை நோக்கினான். கிருஷ்ணர் “ பார்த்தா !!! அவன் கவசம் தான் தகர்க்க முடியாததாய் இருக்கிறதே பின்பு ஏன் உன் பானங்களை வீனடிகின்றாய்? கவசம் இல்லாத இடங்களில் உன் அம்புகள் தாக்க மறுக்கின்றதோ ? “ என்றார். சூட்சமத்தை புரிந்து கொண்டான் அர்ஜுனன். அர்ச்சுனன் கவசம் இல்லாத இடமாக அம்புகளைச் செலுத்தினான். காயமுற்ற துரியோதனன் வலி பொறுக்காது, வேறு பகுதிக்கு நகர்ந்தான்.
அர்ஜுனன் துரியோதனனை தாக்க முடியாத படி, பூரிசிரவஸ் அர்ஜுனனை வழி மறித்து தாக்கினான். உடன் சாத்யகி அர்ச்சுனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான். சாத்யகியை கீழே தள்ளினான் பூரிசிரவஸ். காலால் மார்பில் உதைத்தான். மயக்கம் அடைந்தான் சாத்யகி. அவன் தலையை துண்டிக்க முயற்சித்தான் பூரிசிரவஸ். அர்ச்சுனன் அவன் கையை வெட்டினான். அந்த கை வாளுடன் வீழ்ந்தது. பூரிசிரவஸ் அர்ஜுனனைப் பார்த்து “நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறிக் கெட்டு கையை வெட்டினாயே? தருமரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா? “ என்றான்.
“ நேற்று என் மகன் அபிமன்யூ மீது தர்ம வழி மீறி போரிட்டவன் நீயும் அல்லவா? அது அறநெறியா? “ என்றான் அர்ஜுனன். உடன் பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான். பரமனை எண்ணி தியானம் செய்தான். அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பலரையும் வென்றவாறு அர்ஜுனன் ஜயத்ரதனை தேடினான். போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். கிடைக்கவில்லை. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். கதிரவனோ மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரிதனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். திடீரென மேல் வானில் இருள்சூழ ஆரம்பித்தது. கதிரவன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது.
பாண்டவர்கள் பதறினர். கண்ணனின் பாதங்களில் விழுந்து கதறினர். “ என்னால் என்ன செய்ய முடியும்? விதியின் வலிமை அப்படி! ” என்பது போல் மௌனம் சாதித்தார் கண்ணன். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யூவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கண்ணன் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான் அர்ஜுனன். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண, ஜயத்ரதனும் ஆவலோடு மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான். கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக, மலை முகட்டில் நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். அனைவரும் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த பரந்தாமனோ தன் லீலையை நிகழ்த்த காத்துகொண்டிருந்தார்.
அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான். அப்போது கண்ணன், ”அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்தி, நாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால், தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா!” என்றார். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ந்தது அந்த அதிசயம்.
திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது. ஆம், உண்மையில் அப்போது ஆதவன் அஸ்தமனம் ஆகவில்லை; சூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான்; கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன். பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும், இருளெனும் மாயை மறைந்து, மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.
அர்ஜுனன் கண்களில், தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். ”அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! எடு உன் அஸ்திரத்தை, விடு பணத்தை !!! அவன் தலையைக் கொய்து, வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய்!” என்று ஆணையிட்டான் கண்ணன். கண்ணிமைக்கும் நேரத்தில், காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து, விண்ணிலே தூக்கிச் சென்று, வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி, மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.
தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ, அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது. பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். தன்னை நம்பியவர்களை எப்படிப்பட்ட துயரத்தில் இருந்தும் காத்தருள்வான் கண்ணன் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.
சபதத்தை முடித்தான் அர்ஜுனன். குருக்ஷேதிரத்தை தொடர்ந்தான் கண்ணன். ஆனால் துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். துரோணரிடம் “ இன்று என் தம்பியர் பலர் மாண்டனர். பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர். ஜயத்ரதனும் மாண்டான். அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும். இனிப் பேசிப் பயனில்லை. வெற்றி அல்லது வீர மரணம்’ என்று புலம்பினான்.
இவ்வாறு..ஒரு தரத்திற்கு மகிழ்ச்சியும்..மற்றவருக்கு சோகமுமாக அன்றைய போர் பகல் போர் #முற்றுப்பெற்றது….