தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன், துரோணர் மீதும், கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். எப்படியும் துரியோதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை தீர்கமாக முடிவெடுத்திருந்தார் துரோணர். அசாத்தியமான தன் ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். பாண்டு புத்திரர்கள் மற்றும் அவர்களது படை தளபதியை தவிர மற்ற அனைவரும் அவரின் தாக்குதலை கண்டு கலங்கினர். அவர் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளுக்கு அன்று தடைகளே இல்லை. காற்றை கிழித்துக் கொண்டு இலக்குகளை தாக்கின. ஒரே விசையில் ஏழு அம்புகளை செலுத்தும் தன் ஆற்றலால் பண்டவ படைகளை மிரள வைத்தார். அனைவரும் துரோணரிடம் கடுமையாய் போராடி கொண்டிருந்தனர்.
மற்றொரு திசையில் கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரை துரியோதனனின் பக்கம் கொண்டு சென்றார். துரியோதனனுக்கு துணையாக கர்ணன், சகுனி மற்றும் தம்பி துஷாசணன் இருந்தனர். நான்கு பெயரையும் எதிர்த்தான் அர்ஜுனன். சற்றும் தயங்காமல் கண்டீபதை எடுத்தான். அம்பு மழை பொழிந்தான். அம்புகள் விண்ணை மறைத்து. அர்ஜுனனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் நகர்ந்தனர். கர்ணன் மட்டும் “ அர்ஜுனா நீயும் நானும் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது. தயாராக இரு “ என்று எச்சரித்தான். பார்த்தானோ சற்றும் அஞ்சாமல் “ சென்று வா கர்ணா!!! ” என்று மறுமொழி கூறினான்.
மறுமுனையில் துரோணர் தன் அக்னி அஸ்திரங்களை கொண்டு அனைவரையும் எரித்து சாம்பலாக்கி கொண்டிருந்தார். கோபமுற்று அவரை தடுக்கும் முயற்சியில் இறங்கினார் துருபர். கடும் போருக்கு பின் துரோணரை தாக்கு பிடிக்க முடியாமல் அவரின் அம்பை மார்பில் தாங்கி தன் தேரில் இருந்து சரிந்தார் துருபர். குருக்ஷேத்ரத்தில் தனது பங்கை முடித்து கொண்டார். ஆம், பாண்ட படைகளின் தளபதியான திருட்டத்துயும்னனின் தந்தையான துருபதன் மடிந்தான். திரௌபதியின் தந்தை துருபதன் வீர மரணம் எய்தினார். பின்பு தன்னை எதிர்த்த விராட நாட்டு மண்ணனை பிறை நிலா வடிவம் கொண்ட அம்பினால் கண் இமைக்கும் நேரத்தில் வீழ்த்தினர் துரோணர். அனைவரின் கவனமும் துரோணர் மீதே இருந்தது. போர் துரோணரை சுற்றியே நிகழ்த்து கொண்டிருந்தது. பாண்டவ படைகளை சிதறடித்து கொண்டிருந்த துரோணரை நோக்கி தன் தேரை செலுத்தினான் அர்ஜுனன். துரோணரை மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்தான் அர்ஜுனன். அம்புகள் பாய்ந்தன. அஸ்திரங்கள் சீறியது. வில்லின் நாணொளி போர் முழக்கத்தை விட பெரியதாக இருந்தது. இருவரும் சமமாக போர் செய்தனர். நீண்ட நேர போருக்கு பின் துரோணர் பின் வாங்கினார். துரோணரின் போர் உக்கிரம் தற்காலிகமாக சற்று குறைந்தது.
மற்றொரு புறம் சாத்யகியும் துரியோதனனும் கடுமையாக போர் செய்து கொண்டிருந்தனர். இருவரும் பால்ய நண்பர்கள் என்பதால் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டே போர் புரிந்தனர். கடுமையான போரில் துரியோதனன் ஏதோ நினைத்து தன் வில்லை கீழே வைத்தான். சாத்யகியை பார்த்து “ எனதருமை முன்னாள் நண்பனே !!!! உன்னோடு நான் போர் செய்வதை நினைக்கும் போது இந்த போரையே வெறுக்கிறேன். நீ மட்டும் என்னோடு இருந்திருந்தால் இந்த போருக்கு பின் நாம் இருவரும் இந்த அஸ்தினாபுரத்தை சேர்ந்தே ஆட்சி செய்திருப்போம். விதி அனைத்தையும் விட கொடியது. உன்னையும் நான் இழக்க வேண்டுமா? “ என்றான்.
சாத்யகியின் மனம் சற்று கலங்கியது. தன் வில்லை கீழே வைத்தான். துரியோதனனை நிமிர்ந்து பார்க்கும் போது அவன் தன் கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்து கொண்டிருந்தான். தன் உயிரான நண்பன் கலங்குவதை பொறுக்க முடியவில்லை. அனைத்தையும் மனதில் அடக்கி கொண்டான். பின், துரியோதனை நோக்கி “ நீ அதர்மத்தின் பக்கம் நிற்கிறாய் நண்பா. நமது நட்பை பரிமாறிக்கொள்ள இது நம் குருவின் குடில் அல்ல. நட்பை நான் மறக்கவும் இல்லை, தர்மத்தை நான் கை விடவும் இல்லை. எடு உன் வில்லை.” என்றான். கடும்போர் மீண்டும் தொடர்ந்தது. துரியோதனனை பல இடங்களில் காயம் செய்தான். அவன் வலியால் துன்பப்படுவதை காண சகியாத சாத்யகி அங்கிருந்து விலகி சென்றான்.
துரோணர் தன் அஸ்திரங்களால் பல போர் வீரர்களை கொன்று குவித்து கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், வீரர்களையும், யானைகளையும் கொன்று குவித்தார். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. அவர் இன்று மதியமே போரை முடித்து விடுவார் என்று எண்ணினார் கிருஷ்ணர். துரோணரின் போர் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். ஏதேனும் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன். ஒரு முனையில் யுத்தகளத்தை சுழற்றி கொண்டிருந்தான் பீமன், ‘ அசுவத்தாமன் ‘ என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்தது. விழுந்த இடத்தில் இறந்தும் போனது.
கிருஷ்ணர் பண்டவர்களிடம் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற புரளியை துரோணரிடம் பரப்புவோம். அதை கேட்ட துரோணரின் ஆற்றல் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அவரை வீழ்த்தலாம் என்று கூறினார். தருமரை தவிர அனைவரும் இதற்க்கு ஒப்புதல் அளித்தனர். சத்தியத்தை மட்டுமே பேசும் தருமர் இதை ஏற்க மறுத்தார். அதற்கு கிருஷ்ணர் “ தருமரே!!! நீங்கள் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்தான் என்று பொய் உரைக்க வேண்டாம். இறந்தான் அஸ்வத்தாமன் என்ற யானை என்பதை மட்டும் கூறுங்கள். அதிலும் இறந்தான் அஸ்வத்தாமன் என்பதை சத்தமாகவும், என்ற யானை என்பதை மெதுவாகவும் கூறுங்கள் “ என்றார். அரை மனதுடன் சம்மதித்தார் தர்மர்.
புரளி துரோணரின் காதுகளுக்கு எட்டியது. நிலைகுலைந்தார் துரோணர். அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்பதை மறந்தார். புத்திர சோகத்தால் தன் நிலை இழந்தார். தன்னுள் இருந்த போர் வெறி இறங்கியது. சகஜமான மன நிலைக்கு வந்தார். மனம் கனத்தது. கண்கள் இருண்டன. கையில் இருந்த வில்லை கீழே எறிந்தார். போர்களத்தை சுற்றி பார்வை இட்டார். தான் செய்த கொலைகளையும், அதனால் பெருக்கெடுத்த ரத்த வெள்ளத்தையும் பார்த்தார். போர் வெறியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்ததை எண்ணி அதிர்ந்தார். தூரத்தில் இவரை கொள்வதற்காகவே பிறப்பெடுத்த திருட்டத்துயும்ணன் தன்னை நோக்கி வருவதை கண்டார். மீண்டும் ஆயதங்களை எடுக்க அவரால் முடியவில்லை. இனி போரிட்டு என்ன செய்ய போகிறோம் என்று எண்ணினார். இருப்பினும் கடைசியாக ஒரு முறை தருமரிடம் ஊர்ஜிதம் செய்யலாம் என்று தருமரை நோக்கி “ அஸ்வத்தாமன் இறந்தது உண்மையா?” என்றார். தருமாரோ கிருஷ்ணரின் அறிவுரை படி “ ஆம். இறந்தான் அஸ்வத்தாமன் (என்பதை சத்தமாகவும்), என்ற யானை (என்பதை மெதுவாகவும்) “ கூறினார் தன் தலை குனிந்தவாரே. முதல் பாதியை மட்டும் கேட்ட துரோணர் மனம் உடைந்து சரிந்தார். திருட்டத்துயும்ணன் தன் வாளால் துரோணரின் தலையை கொய்தான். அவன் பிறப்பின் காரணத்தை முடித்தான்.
அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சொல்ல கண்ணன் வற்புறுத்திய போது, அதில் உள்ள சூழ்ச்சியை தருமர் உணர்ந்தார். பின்னரும் அப்படிச் சொல்ல உடன்பட்டது அவரின் பண்பில் நேர்ந்த குறை. அதுவரை மண்ணில் படாத தருமரின் தேர், இச்செயலால் பாவம் நிறைந்த இன் பூமியில் இறங்கியது.
துரோணரின் வீழ்ச்சியோடு….. ஆதவன் மறைய…… பதினைந்தாம் நாள் போர் முடிந்தது…..
(தொடரும்………….)