துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று செய்த போர் காலம் கர்ண பர்வம் என்று அழைக்கப்படுகிறது. பிஷ்மர், துரோணர், ஜயத்ரதன் ஆகியோர் வீழ்ச்சிக்குப் பின் கௌரவர் படை செயலிழந்து நின்றது. துரியோதனனின் தம்பியர் பலர், உதவிக்கு வந்த அரசர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயினும் துரியோதனன் மாறவில்லை. எப்படியாவது பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்றே குறியாய் இருந்தான்.
கர்ணன் தளபதியாய் ஆனதும், கண்ணன், அர்ஜுனனிடம் கர்ணனைப் பற்றி சொல்கிறார் :
“கர்ணன் ஒரு மாவீரன். அவனை உனக்கு சமமானவன் மட்டும் அல்ல உன்னை விட வீரத்தில் மேலானவன். ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம். வேகத்தில் கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம். சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.
வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன். உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன். வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன். போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன். எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன். மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.
மூவுலகின் தலை சிறந்த அனைத்து வீரர்களும், கடவுளர்களும் ஒன்று சேர்ந்து சண்டை இட்டாலும் அவனை வெல்ல முடியாது. எனவே அதற்காய் பலரின் கோபத்துக்கு அவனை ஆளாக்கி, அவனது வலிமை பாதியாய் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் கூட, அவனுக்கும், உனக்கும் நடைபெற இருக்கும் மாபெரும் சண்டையில், சிறந்த, சிதறாத கவனம், மற்றும் தெளிவு இருந்தால் மட்டுமே அவனை வெல்வது சாத்தியம். “ என பலவாறாய் அர்ஜுனனுக்கு யோசனைகள் சொல்லி, அவனை கர்ணனுடனான யுத்தத்துக்கு கண்ணன் தயார் செய்தார்.
போர் தொடங்கும் போது மகர வியூகம் அமைத்தான் கர்ணன். திருஷ்டத்துய்மன் சந்திர வியூகம் அமைத்தான். போர் ஆரம்பித்தது. முதலில் நகுலனை எளிதில் வென்றிடலாம் என கர்ணன் அவனுடன் போரிட்டான். நகுலன் கர்ணனை பார்த்து “ கர்ணா!! நீ என்னுடன் போரிடுவது என் அதிர்ஷ்டமே. ஆணவம் பிடித்த உன்னை நான் ஒருவனே தனியாய் நின்று வீழ்த்துவேன். எடு உன் வில்லை. தொடுத்து பார் உன் கணைகளை. இன்றுடன் ஒழிந்தாய் நீ. “ என்று முழங்கினான். கண்ர்ணன் சற்றும் அஞ்சவில்லை. எழுபத்து மூன்று அம்புகளை அவன் மீது செலுத்தினான். நகுலனின் வில்லை ஒடித்தான். தேரை அழித்தான். வாளை துணித்தான். கேடயத்தைச் சிதைத்தான். கதையைப் பொடியாக்கினான். நகுலனின் அணைத்து ஆயுதங்களையும் துச்சமாக வென்றான். பிறகு மூன்று பிறை நிலா வடிவில் ஆனா அம்பினால். அவன் குதிரைகளை வீழ்த்தினான். நகுலன் அங்கிருந்து வேகமாக நகர்ந்து தருமரின் தேரில் ஏற முயன்றான். விரட்டி சென்று வழிமறித்தான் கர்ணன். “ சிறுவனே.. என்ன சொன்னாய் என்னை நோக்கி.. நினைவு இருக்கிறதா??? ஆணவம் கொள்வது, அறிவைக் கொன்று விடும். இனிமேலாவது, உனக்கு சமமானவர்களுடன் போரிடு. உன்னைவிட ஆற்றல் கொண்டவர்களிடம், அடங்கிப் போ. போ.. போய் கண்ணன் மற்றும் #அர்ஜுனனின் மறைவில் இளைப்பாறு “ எனக் கூறி அடுத்த இலக்கை நோக்கி செலுத்தினான் தன் தேரை. அவமானத்தால் தலை குனிந்தான் நகுலன். அவன் நகுலனை எளிதாகக் கொன்றிருப்பான் ஆனால் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அவனை கொல்லாது விடுத்தான்.
ஒரு புறம் கிருபருக்கும் #திருஷ்டத்துய்மனுக்கும் கடும் போர் மூண்டது. தன் தங்கையின் கணவனை(துரோணரை) கொன்ற திருஷ்டத்துய்மனுக்கு இன்று மரணத்தை பரிசாக தர வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார். அது மட்டும் அல்ல, பாண்டவ படை தளபதியான திருஷ்டத்துய்ம்ணன் முதல் நாள் போரில் இருந்தே தன் #வியூகம் அமைக்கும் திறமையால் கௌரவர்களில் பல முயற்சிகளை முறியடித்தான். அதனால் அவனை வீழ்த்துவதே வெற்றியின் ரகசியம் என்று எண்ணினார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை உணர்த்தினான் திருஷ்டத்துய்ம்ணன். விடாமல் பொழிந்த அம்பு மழையின் இறுதியில் கிருபர் தன் தேரையும், சாரதியையும் இழந்திருந்தார். தானே தன் தேரை செலுத்தி பாசறை திரும்பினார்.
கிருதவர்மா சிகண்டியைத் திணற அடித்தான். சிகண்டியும் சளைக்காமல் போர் புரிந்தான். இருவரும் சமமாகவே போர் செய்தனர். கிருதவர்மாவின் ஆயுதங்கள் தீர்ந்து போக அவனும் பாசறை திரும்பினான். அர்ச்சுனன் வழக்கம் போல் தன் ஆற்றலை வெளிப்படுத்தினான். அவன் காண்டீபதில் இருந்து அம்புகள் சீரிய வண்ணம் இருந்தது. அவன் திரும்பிய திசையெங்கும் வெற்றி முகம். அர்ஜுனனின் பார்வை அன்று கௌரவர்களின் யானை படை மீது பட்டது. பீமனுக்கு யானை படைகளை தகர்க்கும் பொறுப்பு அன்று கொடுக்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் அவனுக்கு உதவ முற்பட்டான்.
அன்றைய தினத்தில் பீமனும் அர்ஜுனனும் சேர்ந்து 800 யானைகளையும் அதன் வீரர்களையும் வீழ்த்தினார்கள்.
நகுலன் தருமரின் தஞ்சத்தை தேடி சென்ற நேரத்தில் துரியோதனனுக்கும் தருமருக்கும் போர் மூண்டது. தருமர் அவன் தேரை அழித்தார். வில்லை இரண்டாக முறித்தார். தமது சக்தி ஆயுதத்தால் துரியோதனனின் உடம்பெங்கும் புண்ணாக்கினார். யுதிர்ஷ்டிரர் கை மேலோங்கி, துரியோதனன் தன் ஆயுதங்கள் அனைத்தையும் இழந்தான். உடனே அவனைக் காக்க, கிருபர், கர்ணன், அசுவத்தாமா அனைவரும் வந்தனர். அவர்களின் நடுவே கொஞ்சம் களைப்பாறி பின்னர் வேறொரு ரதத்தில் ஏறி, துரியோதனன் மீண்டும் யுதிர்ஷ்டிரருக்கு சவால் விட, கோபம் கொண்ட அவர், மீண்டும் ஒரு கடும் யுத்தத்திற்கு பின்னர், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆய்தத்தை எடுத்து, துரியோதனனை நோக்கி எறிந்தார். அது அவனை நிச்சயம் துளைத்துக் கொண்டு, அவன் உயிரைப் போக்கி இருக்கும். பீமனின் சபதம் நினைவு வர, தருமர் அவனை உயிருடன் விட்டார். அந்த ஆயுதத்தை திரும்ப அழைத்து கொண்டார். அவனும் தப்பி வேறிடம் சென்றான. ஆகவே அன்று அவன் தப்பித்தான்.
ஆதவன் மேற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்து கொண்டிருந்த வேளையில் அன்றைய போர் முடிந்தது. அனைவரும் பாசறைக்குத் திரும்பினர்.
அன்று இரவில்……
கர்ணனின் செயல் துரியோதனனை வருத்தியது. அவன் நகுலனையாவது கொன்றிருக்கலாம் என எண்ணினான். கர்ணனிடம் சென்று தன் வாழ்வு அவனிடம் தான் இருப்பதாகக் கூறி, எப்படியேனும் அடுத்த நாள் அர்ச்சுனனை போர்க்களத்தில் கொன்றுவிடுமாறு கேட்டுக் கொண்டான். கர்ணனும் துரியோதனனும் மனம் விட்டு பேசினர் :
துரியோதனன் : கர்ணா, என் ஆருயிர் நண்பா, நானும், எனைச் சார்ந்தோரும் உன்னை நம்பியே இருக்கிறோம். எங்களை இந்த போரில் வெற்றி அடைய செய்ய உன்னால் மட்டுமே முடியும் நண்பா.
கர்ணன் : நண்பா, அதை நானும் அறிவேன். உன்னிடம் நான் இன்று சில விஷயங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன். அச்சம் கொள்ளாதே. அது உன் தைரியத்தைக் கொன்று விடும். அர்ஜுனனுக்கும், எனக்கும் உள்ள நிறை, குறைகளை உனக்கு நான் சொல்கிறேன் கேள். எனக்கு வேண்டிய உதவி நீ செய்தால் நிச்சயம் வெற்றிக் கனி நமக்குத்தான்.
துரியோதனன் : உன் வாக்கு பலிக்கட்டும். சொல் நண்பா…
கர்ணன் : என் தெய்வீக அஸ்திரங்கள் அர்ஜுனனிடம் இருப்பதற்கு சமமானவை தான். எதிரிகளை அழிப்பதில் அவனை விட நான் மிஞ்சினவன் தான். மற்றும், உடல் வலுவிலும், மன வலுவிலும், எண்ணத்தின் தீர்கத்திலும் நான் அவனை விட வலுவானவன் தான். இந்திரனுக்காய், விஸ்வகர்மாவால் தயாரிக்கப்பட்ட என் வில் “விஜயா” காண்டீபத்தை விட சக்தி வாய்ந்ததுதான். இந்திரன் என் குருவான பரசுராமருக்கு அதை அளிக்க, என் கற்கும் திறமையில் மகிழ்ந்த என் குருநாதர் அதை எனக்கு அளித்தார். என் அம்பு மழையை சமாளிக்க அர்ஜுனனால் இயலாது. என் அம்பின் வீச்சுக்கு முன்னே அவனால் நிற்க இயலாது…
துரியோதனன் : அதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே நண்பா… உனக்கு அவன் ஈடாக முடியுமா???
கர்ணன் : ஆனால்… கவனி நண்பா, அர்ஜுனன் என்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று சொல்கிறேன் கேள். அர்ஜுனனின் சாரதியாய் இருப்பவர், சகல உலகங்களை தனக்குள் அடக்கிய, தாய் தேவகியின் தெய்வீகப் புதல்வன் கண்ணன். மூவுலகுக்கும் கடவுள் அவன். மேலும் அந்த ரதம், அக்னி பகவானால், கான்டவ வனத்தைக் அழிக்க அவனுக்கு வழங்கப்பட்ட தெய்வீக ரதம். எந்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தாலும் அழிக்க முடியாத வலுப்பெற்ற ரதம் அது. அதன் குதிரைகளும் அப்படியே. மனோ வேகத்துக்கு ஈடான வேகம் கொண்டவை அந்தக் குதிரைகள். பார்த்தனிடம் இரு அம்பறாப் துணிகள் உள்ளன. என்றுமே தீர்ந்து போகாத அம்புகளை உடையவை. எடுக்க எடுக்க குறையாது அம்புகள் அதிலே நிறைந்து கொண்டே இருக்கும். என்னிடம் அது போல இல்லை. அவன் காண்டீபத்தின் நானும் தெய்வீகத் தன்மை உடையது. அழிக்க இயலாதது. துண்டிக்க இயலாதது. அர்ஜுனனின், ரதத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியில் உள்ள குரங்கு சின்னம். நீ இதை நிச்சயம் அறிந்திருப்பாய். சாட்சாத் அனுமார் அந்தக் கொடியில் வீற்றிருக்கிறார். யுத்த களத்தில் அர்ஜுனன் ரதம் வரும் வழியெல்லாம் அதன் கர்ஜனை ஒலித்து, நம்மவரை நடுங்க வைக்கும்.
துரியோதனன் : அப்போது நம் நிலை?
கர்ணன் : கவலை வேண்டாம் நண்பா… நான் இருக்கிறேன். ஆனாலும் எனக்கு நீ ஒரு உதவி செய்தாயானால் நிச்சயம் நான் அர்ஜுனனை வெல்வேன்.
துரியோதனன் : என்ன செய்ய வேண்டும் என் உயிருக்கும் மேலானவனே???
கர்ணன் : எனக்கு மட்டும் கண்ணனைப் போலே ஒரு சாரதி இருந்தால் என்னால் நிச்சயம் வெல்ல முடியும்.
துரியோதனன் : அவர் அளவுக்கு சாரதியா???
கர்ணன் : ஆம் நண்பா. நமது பிரிவில் இருக்கும் சல்லியன், மிகச் சிறந்த பயிற்சி கொண்டவர். தேரோட்டுவதில் கண்ணனுக்கு நிகரானவர். அவர் மட்டும் எனக்கு சாரதியானால், வெற்றி நமக்கு நிச்சயம் தான். கூடவே எனக்கு ஆயுதங்கள் நிரம்பிய வண்டிகளும் என்னுடன் வேண்டும்.
துரியோதனன் : நிச்சயம் நண்பா… நான் இப்போதே சென்று சல்லியனிடம் பேசுகிறேன். நீ கேட்ட அனைத்தும் உனக்கு நாளை தயாராய் இருக்கும். இப்போது நீ ஓய்வெடு நண்பா. நான் உன்னை காலையில் சந்திக்கிறேன். (விடை பெறுகிறான் துரியோதனன்)
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் கர்ணன் தன் எதிரியான அர்ஜுனனை நன்றாக தெரிந்து வைத்திருந்தான். எதிரியின் பலம் மற்றும் பலவீனம். தன்னுடைய பலம் மற்றும் பலவீனம் இவை அனைத்தையும் அராய்ந்து தெளிவான மனநிலையில் இருந்தான். ஆனால் அர்ஜுனன் அப்படி இல்லை. அர்ஜுனன் அந்த பாடத்தை எப்படி படிக்கிறான், யார் அந்த பாடத்தை அவனுக்கு புகுத்துகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம்…..
(தொடரும்………….)