திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் செல்வது மலையைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் தார் சாலையில்தான், ஆனால் அதையும் தாண்டி மலை அருகிலேயே ஒரு காட்டுப் பாதை இருக்கிறது. ஒற்றையடிப் பாதை, பல இடங்களில் அதுவும் இல்லாது வழி பற்றிய சில சங்கேத குறியீடுகள் மட்டுமே இருப்பது சித்தர்கள் பயணிக்கும் உள் கிரிவல பாதை.
இது ஒரு வித்தியாசமான அனுபவம். திருவண்ணாமலை ஊரின் எந்த சத்தங்களுமில்லாத அமைதியான ஒரு பாதை, முள் செடிகளும், குறு மரங்களுமாய் வலதுபக்கம் வித விதமான தோற்றம் தரும் அண்ணமலையுமாக ஒரு அற்புத பேரானந்த கிரிவலம்.
பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதும், விசேஷ அனுமதியுடன் சென்றால் மட்டுமே இந்தப் பாதையில் செல்லமுடியும். அவ்வளவு சுலபத்தில் அனுமதி கொடுப்பதும் இல்லை. சில அசம்பாவிதங்கள் நடந்ததும் காரணம். அதனாலேயே ஒரு சிறிய குப்பை கூட இல்லாமல் பாதை சுத்தமாக இருந்தது.
முதலில் ஆரம்பிக்கும் பாதை இலகுவாக இருந்தாலும் போகப் போக வெறுங்காலில் நடக்கும் திறன் இல்லாதவர்களுக்கான கடுமையான சோதனை ஆரம்பமாகும்.
நிறைய மான் கூட்டத்தைப் பார்க்கலாம். அழகான குளம் இருக்கிறது, சிறிய குட்டைகள் இருக்கின்றன. பல சாதுக்கள், சாமியார்களைக் காணலாம். மற்றபடி காட்டுக்கே உரிய தூய சப்தங்கள். விஷயமுள்ள லெளகீகம் துறந்த தீவிர யோகத்தைக் கடைபிடிக்கும் சித்தர்களுமுண்டு. அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதும் அத்தனை சுலபமும் இல்லை.
எல்லாம் வல்ல பரம்பொருளின் கருணை இருந்தால் மட்டுமே இந்த பாதையில் செல்வது சாத்தியமாகும்.