ஆலயதரிசனம்…
அருஞ்சுனை காத்த அய்யனார்..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. செக்கச் சிவந்த செம்மணல் சூழ்ந்த பாலைவனத்தில் ஆங்காங்கே குறும்புதர்களும், உடை முள் மரங்களும், எத்திசையில் பார்த்தாலும் வளர்ந்து நிற்கும் உயரப் பனைகளும், அடர்ந்துள்ள பகுதிதான் தேரிக்காடு.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தாலுகாவில் முழுமையாகவும் சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படுகிறது இச் செம்மண் தேரி….!
கற்கள் ஏதும் இல்லாமல் மாவு போன்ற பதத்தில் மிக மென்மையானதாகக் காணப்படும் இந்த தேரி மணலில் நடந்தால் அரை அடி அளவிலாவது கால்கள் புதைந்துவிடும். இதில் நடக்கும் போது பாலைவனத்தில் நடந்து செல்லும் ஒட்டகத்தைப் போல ஆகிவிடும் நம் நடை.
இத்தேரி பகுதிகளில் ஆங்காங்கே காணப்படும் சாஸ்தா கோவில்களில் ஒன்றுதான் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்..!

திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது இக் கோவில். இக்கோவிலைச் சுற்றி உள்ள நீர் ஊற்றினை “சுனை” என்று அழைக்கிறார்கள். இந்த சுனையை காத்து அருளும் அய்யனார் என்பதால், இவருக்கு “அருஞ்சுனை காத்த அய்யனார்” என பெயர் வந்ததாம். இச் சுனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக தானாகவே உருவாகி இதனால் விவசாயம் செழித்த பகுதி இது.
பூரண புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார் அய்யனார். பேச்சி, பரமேஸ்வரி, தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பன், சுடலைமாடன், இசக்கி, பட்டாணி, முன்னோடி முருகன் ஆகியோர் பரிவார தெய்வமாக அருள் பாலிக்கிறார்கள்.

இந்தச் சுனையில் குளித்தால் தீராத பிணியும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். கடந்த ஆண்டு இச்சுனைப்பகுதியில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் செழுமையில் படித்துறை படிகள் தெரியாத படி வெள்ளம் போலச் செல்கிறது தண்ணீர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

செம்மண் தேரி, வெயிலையே கண்ணுக்குத் தெரியாமல் சுற்றுச் சூழலில் நிழல் தரும் மரங்கள், பறவைகளில் ரீங்கார ஒலிகள் இத்தனையும் தாண்டி சுனைப்பகுதியை பார்த்த உடனேயே ஆனந்தக் குளியல் போடத் தோன்றும் எண்ணம் இவையாவும் ஒருசேர கிடைப்பது இங்கு மட்டும்தான்….!