கொடைக்கானலில் வெளி உலகிற்கு தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய இடங்கள் ஏராளம்!
அவற்றில் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலைநாதன் சிவன் கோவில் மிக அழகிய தலமாக காண்போரைக் கவர்ந்து வருகிறது.

பிரமாண்ட பாறையில் குகை வடிவில் அமைந்திருக்கும் இந்த கோவில் நேரில் காண்போரை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். இந்த கோவில் 1300 வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது!
இப்போதும் இந்தக் கோவிலில் உள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது!
மலைச்சரிவில் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் வண்ணம் இந்த கோவிலுக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது.
குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனங்களில் செல்ல இயலாது!
இந்தப் பாறையின் அமைப்பை பார்க்கும் பொழுது இருபுறமும் கதவு வடிவில் காணப்படுவதால் இந்த கோவில் கதவு மலை நாதன் கோவில் எனப் பெயர் பெற்று விளங்குகிறது.
லிங்க வடிவமாக அல்லாமல் சிலை வடிவில் சிவன் காட்சி தருவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்று அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கால்நடையாக இங்கு வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
பௌர்ணமி நாட்களும் இங்கு விசேஷ நாட்களாக உள்ளது. சமீப காலமாக இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்து பக்தர்களாக திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.