உலக ஆறுகளையெல்லாம் விடவும் எதற்காக கங்கைக்கு மட்டும் தனிப்பட்ட குணாம்சங்கள் இருக்கின்றன என்பதினைக் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகளால் அதன் காரணத்தை இன்றுவரையில் கண்டுபிடிக்க இயலவில்லை.
கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து வரும் பிற ஆற்று நீர்களுக்கு கங்கையின் நீரைப்போல தனிச்சிறப்பு எதுவுமில்லை.
அதே மலை. அதே மேகங்கள். அதே பனி உருகல். எனினும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடுத்து நிருபிக்க முடியவில்லை. சில விஷயங்கள் நிருபிக்க முடியாதவைதான். கங்கையில் நாமறியாத ஓர் இரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது மிகவும் கடினம்.
கங்கை நதி சாதரண நதியன்று. அந்த நதி முழுவதுமே அற்புதமானதொரு ரசவாதச் சாலைதான். அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள் உருவாகியிருக்கின்றன.
உலக நதி நீர்களினின்றும் கங்கையின் நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதினை ரசவாதிகளும், விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, பிற நதி நீரினைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும். ஆனால் கங்கையின் நீர் கெடவே கெடாது. பல ஆண்டுகள் சேமித்து வைத்திருந்தாலும் அந்த நீர் கெடுவதில்லை. ஆனால் மற்ற ஆறுகளின் நீர் சில வாரங்களிலேயே கெட்டு நாறிவிடும்.
ஆற்றில் பிணங்களை வீசினால் அந்த ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றளவும் கங்கை கெட்டு நாறாமல் இருக்கிறது!
இன்னொரு வியப்பான விஷயம் என்னவென்றால், சாதாரணமாக எலும்பு நீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் எலும்பு முற்றிலுமாகக் கரைந்துவிடுகிறது! அதில் மிச்சம் மீதியே இருப்பதில்லை. தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆலமூல, மூலக நிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறது கங்கை.
சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் கங்கையில் விரைவில் அந்தச் சவங்கள் கரைந்துவிடுகின்றன. அப்படியொரு ஆச்சரியமான ரசவாதம் அது! கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போல எனக்குத் தோன்றுகிறது.
மற்ற ஆறுகள் பாய்வது போல கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாக செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை! இதனைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல.கங்கையின் பிறப்பிடம் “கங்கோத்ரி” என்கிற மிகச் சிறிய சுனை. ஆனால் அதன் உண்மையான பிறப்பிடம் அதுவன்று. அது முற்றிலும் நமது பார்வையினின்றும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாம் காணுவது வெறும் வெளி முகப்பு மட்டுமே. நமது மக்கள் இதனைத்தான் சென்று, கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள்.
உண்மையான கங்கையின் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது. முன்பே சொன்னபடி இப்போதுள்ள இடம் வெறும் வெளி முகப்பு மட்டுமே. சாதாரண முறையில் அந்த இடத்தை நாம் அடைவது சாத்தியமே இல்லை. சூக்கும சரீரம் கொண்டே அங்கு செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. உண்மையான கங்கோத்ரி சாதாரண கண்களுக்குத் தெரியாது.
தியானத்தின் மூலம் பருவுடல் பின்னே தங்கிவிட சூக்கும சரீரம் கங்கோத்ரியை நோக்கிப் பயணம் செய்யும். அப்போதுதான், அப்போது மட்டுமே கங்கை நீரின் சிறப்பம்சங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அதனை நிரூபிக்க முடியாது என்று சொன்னேன். நிரூபிக்க எந்த வழியும் இல்லை.
ஹிந்துக்களின் புனிதத் தீர்த்தத் தலங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில் அமைந்திருக்கின்றன….
கங்கையில் இரசாயனச் சோதனையும் நடக்கிறது; ரசவாதமும் நடக்கிறது. கங்கையில் குளித்த பின்னர் ஒருவர் மிக எளிதாக புனிதத்தில் பிரவேசித்துவிடலாம். கங்கையில் நீராடிய உடனேயே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால் அந்த மாற்றம் சற்று நேரம் மட்டுமே நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்மப் பயணம் ஆரம்பமாகிவிடும்.இன்னொன்றையும் மறந்துவிடக் கூடாது.கங்கையின் நீரை மட்டுமே அருந்தி வருபவர் வேறொரு நீரை அருந்தினால் சிக்கலில் சிக்கிக் கொள்வார்.
கங்கை நீரைப் போலவே இருக்கும்படி மற்ற ஆற்று நீர்களையும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவையனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. காரணம் அதற்கான சாவி நம்மிடமிருந்து தொலைந்துவிட்டது.கங்கையில் நீராடிய பின்னர், கோவிலுக்குச் சென்று, பூசைகளையும், வழிபாடுகளையும் செய்வதெல்லாம் அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கமேயன்றி வேறில்லை.
**
இந்தியாவில் சாதகனுக்கு எல்லா வகையிலும் உதவும்படியாக ஆலயங்களும், புனிதத் தலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் மணியோசை, நறுமண தூபங்கள், மலர்கள் என எல்லாமே சிறப்பான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. இரவும், பகலும் தியானம் கலையாமல் இருக்க நமக்குள்ளே ஒரு ஒத்திசைவு தோன்றுவதற்காகவே இவை ஏற்படுத்தப்பட்டன.
தீபாராதனை எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வினாடிகள், ஒரு குறிப்பிட்ட மந்திரம் சொல்லியே நிகழ்த்தப்படுகிறது. காலையில் இவ்வளவு நேரம், மாலையில் இவ்வளவு நேரம், நண்பகலில் இவ்வளவு நேரம் என்கிற பாகுபாடுகள் உண்டு.
மந்திரத்தின் ஓசை அந்த அறைக்குள் அதிர்வுகளை உண்டாக்கும். ஒரு மந்திரத்தின் ஓசை முடிவதற்குள் அடுத்த ஓசை அதன்மேல் எழும். ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், இடைவெளியில்லாமல் பல்லாயிரம் ஆண்டுகள் அங்கே அது நிகழ்ந்து கொண்டே இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
தண்ணீரைத் தொடர்ந்து தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் அதன் பண்பு மாறிவிடும் என முன்பொருமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அதுபோலவே ஓசையும் ஒரு அறையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தால் அந்த அறையின் தன்மையே மாறிவிடும். அந்த அறைக்குச் செல்லும் சாதகனுக்கு அது மிகவும் உதவும்.
நமது தனித்தன்மை பருப்பொருள்களால் (பஞ்சபூதங்கள்) உருவானது. அதனால், பருப்பொருள்களில் ஏற்படும் மாற்றம் நமது தனித்தன்மையை பாதிக்கும். மனிதன் என்பவன் புறநிலைப் படைப்பு. அதனால் அவனை புறத்திலிருந்து மாற்றுவது எளிதானது. உள் மாற்றங்கள் ஆரம்பத்தில் சிரமம் தரும். உடலளவில் அவனை மாற்ற சில பொருட்களைக் கொண்டு சில ஏற்பாடுகளை இங்கே செய்ய வேண்டியிருக்கிறது.இன்னொன்றையும் நாம் இங்கே புரிந்து கொள்ளவேண்டும். சாதரணமாக நமெல்லோரும் தனித்தனியானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு தவறானதொரு நம்பிக்கை. நாமெல்லோரும் ஒன்றாக அமர்ந்திருக்கையில் மவுனமாக இருந்தால், நாம் பலரல்ல. ஒருவரே. ஏனென்றால் மவுனத்தின் ஒருமை அங்கே தங்கி நிற்கிறது. அப்போது நம் பிரக்ஞை அதிர்வுற்று எல்லோருக்குள்ளும் பரஸ்பரம் பாய ஆரம்பித்துவிடுகிறது.