முன்பொரு காலத்தில் ஒர் ஊரில், பிச்சைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் சுட்டெரிக்கும் வெய்யலில், காலில் செருப்பு கூட இல்லாமல் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது ,
“அம்மா தாயே பார்வதி பிச்சை போடு” என்று கேட்பது அவன் வழக்கம
இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள். பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டி உதவும்படி சிவனிடம் பார்வதிதேவி வேண்டினாள்.
ஆனால் சிவபெருமான், “இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் தலைவிதி,பிராப்தம் என்றும், அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது” என்றும் கூறி விடுகிறார். அவர் எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. (தாய் அல்லவா..?)
“முடிந்தால் அவன் விதியை நீ மாற்றி கொள் ” என்று சிவபெருமான் கூறி விடுகிறர்.
“நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன் ” என்று ஈசனிடம் கூறிவிட்டு அவனுக்கு உதவ பார்வதி தேவி வருகிறார்.
ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார். (முக்காலமும் உணர்ந்த முக்கண்ணன் ஆயிற்றே..!)
பூலோகம் வந்த தேவி பார்வதி. பிச்சைக்காரன், ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் பொன்னும், நவரத்தினங்களையும், தங்க காசுகளையும் சேர்த்து மூட்டையாக்கி அவன் வரும் வழியில் போடுகிறாள் .
அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென ஒரு யோசனை (விதி) உருவானது, “ஒரு வேளை தான் வயதான பிறகு கண்கள் மங்கி குருடாகி விட்டால் எப்படி பிச்சையெடுப்பது ? ” என்ற எண்ணம் வருகிறது. “சரி அதை இப்போது பரீட்சித்து பார்த்து விடுவோம்” என்று நினைத்தவாறு, கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு தட்டுத் தடுமாறி செல்கிறான்.
வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டை காலில் இடறுகிறது.
பிச்சைகாரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூட்டையை கல் என்று நினைத்து, “பாவி எவனோ நடு ரோட்டில் கல்லை போட்டு வைத்திருக்கிறான்” என்று புலம்பிய வாறு கால்களால் எட்டி உதைத்து தள்ளிவிட்டு, அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.
அடுத்த வீட்டிற்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு , “ஆகா.. குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் கர்வமாக திருப்தியடைந்து கொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல, “அம்மா தாயே பார்வதி பிச்சை போடு” என்று வழக்கம்போல் கூவுகிறான்..!
விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது…!
கடவுளும் விதிக்கு கட்டுப்பட்டே
ஆகவேண்டும்..!
அநியாயத்திற்கு துணை போகாமல், தர்மத்தின் வழி நடந்து, கொஞ்சமாவது, புண்ணியத்தை யாவரும் தேடிக்கொள்ள வேண்டும்..!
மேலிருந்து எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்…!
சர்வம் சிவார்ப்பணம்..!
ஒம் நமசிவாய…!