இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும்.
மூலவர் : ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)
தாயார் : சௌந்தர்யநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : வைகை
ஊர் : இடைக்காட்டூர்
மாவட்டம் : சிவகங்கை
தல வரலாறு :
முற்காலத்தில், இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இருநிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், ‘இடைக்காடர்” எனப்பட்டார்.
சிவபக்தரான இவர், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தினமும் சிவபூஜை செய்து வழிபட்டார். சிவனருளால் சித்தர்களில் ஒருவரானார். இடைக்காடரை, சிவன் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். பின் இங்கு சிவனுக்கு கோவில் எழுப்பப்பட்டது.
தலப்பெருமை :
ஒருசமயம் நவகிரகங்களின் மாறுபட்ட நிலையால் பஞ்சம் உண்டானது. இதை முன்கூட்டியே அறிந்திருந்த இடைக்காடர், தனது ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உண்ண பழகிக்கொடுத்து பஞ்சத்தை சமாளித்தார். இதையறிந்த கிரகங்கள், இடைக்காடரைக் காண அவரது இருப்பிடத்திற்கு வந்தன. இடைக்காடர், கிரகங்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்கவே, மகிழ்ந்த கிரகங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தன. அப்போது மழை பெருகும்வகையில் அவற்றின் திசைகளை மாற்றி விட்டார். உடனே மழை பொழிந்து பஞ்சம் நீங்கியது.
தாங்கள் திசை மாறியிருப்பதை அறிந்த கிரகங்கள், இடைக்காடர் மக்களின் நன்மைக்காக தங்களை மாற்றியதால் அந்த திசையிலேயே அமைந்தன. இந்த நிகழ்வு சித்தரின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு நவகிரகத்திற்கென தனிக்கோவில் இருக்கிறது.
வைகையின் வடகரையில் அமைந்த கோவில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார். எனவே இவர் ‘ஆழிகண்டீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் சௌந்தர்யநாயகி தனிசன்னதியில் இருக்கிறாள்.
சுவாமி, அம்பாள் சன்னதிக்கு நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர் மிகவும் விசேஷமானவர்.
இது சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே விழா எடுக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவ கோவில் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
தலச்சிறப்பு :
பொதுவாக சிவன் கோவில் பிரகாரத்தில் ஈசான்ய திசையில் (வடகிழக்கு) நவகிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய திசையில், தனிக்கோவிலில் நவகிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார்.
பிரார்த்தனை :
திருமணத் தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தலாம்.
நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே