வேத சிவாகமங்கள் இரண்டும் பதிவாக்குகளாகையால் ஒன்றிலொன்று முரணாமை வெளிப்பட்டது. சிவபெருமான் அவ்வேதத்திற் பெறப்படும் பொருள்களில் தம்முடைய முடி பொருளும் ஒன்றே ஆதல் நோக்கி, அது எதுவென மயங்காதவழி அப்பெருமை தோன்ற வேதத்துக்குச் சிவாகமங்களைப் பாடியம் எனச் செய்தனர்.
ஆகவே, வேதம் சூத்திரமும், சிவாகமம் பாடியமும் என அருளப்பட்டன. சிவவாக்காகிய வேதத்துக்கு உலகாயதம், மாயாவாதம், பாஞ்சராத்திரம் முதலியன பாடியங்களாய்ப் பிருகஸ்பதி முதலாயினோரால் செய்யப்பட்டமை கொண்டே அவை வேதத்தின் உண்மைப் பொருள்கள் ஆகாவாம்.
வேதத்தைச் செய்த சிவபெருமான் அதற்கு பாடியமும் தாமே செய்திருத்தலால், மூலக்காரரே உரையுஞ் செய்துள்ளாராக, அவ்வுண்மை உரையைக் கைவிட்டு வேற்றுரைகளின் மொத்துண்டு அலைவது எற்றுக்கு? அவ்வேற்றுரைகள் பதிவாக்குகள் அல்லாமையால் பிற பசுக்களுரையை நாம் பற்றுவதைக் காட்டிலும் பசுக்களாகிய நாமே நமக்கு விளங்கிய வழி ஏன் பொருள் கொள்ளக்கூடாது? பசுக்களுக்கு பசுக்களா உண்மை உணர்த்தற்பாலர்? குருடனுக்கு குருடனா கோல் கொடுப்பவன்? ஆகவே, பசுமார்க்கங்களில் பதிமார்க்கமாகிய சிவஞானம் ஒன்றாதல் நிகழாமை கண்டு தெளிக.
வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சூளை ஸ்ரீ சோமசுந்தரநாயகர் அவர்களால் இயற்றப்பட்ட சிவபாரம்யப்பிர தரிசிநி என்னும் நூலில் இருந்து.
நமச்சிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏