சபரிமலையில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறக்கப்பட்ட 3 நாட்களில் சுமார் 1.20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் சபரிமலை வருமானம் ரூ.4.75 கோடியை எட்டி உள்ளது.
மகரவிளக்கை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பத்தனம்திட்டா மாவட்ட துணை கலெக்டர் அர்ஜுன் பாண்டியன் தலைமையில் உயர் மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று சன்னிதானத்தில் நடைபெற்றது. அதன் பின், அர்ஜுன் பாண்டியன் கூறியதாவது:-
மகர விளக்கு தினத்தில், பாதுகாப்பான முறையிலும் சிரமங்கள் இல்லாமலும் பக்தர்கள் மகர ஜோதியை காண அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு பம்பை ஹில் டாப் பகுதியில் இருந்து மகர ஜோதியை காண ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கான சிறப்பு ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.