கோவில்கள் அதிகமாக உள்ள புண்ணிய பூமியாகவும், புராதனம் மிக்கதும் காஞ்சிபுரம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான பஞ்சபூத தலங்களில் முதன்மையான ‘ஏகாம்பரநாதர்’ திருக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவ பெருமானின் கோபத்தினால் பூமிக்கு வந்த பார்வதிதேவி, இங்கு வந்து ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் பிடித்து, பஞ்ச அக்னியின் நடுவில் நின்று தவம் செய்தார். அப்போது வெள்ளம் பாய்ந்து வந்தது. மணல் லிங்கம் சேதமாகாமல் இருக்க, அந்த லிங்கத்தை தழுவி காப்பாற்றினாள் பார்வதிதேவி என்கிறது தல புராணம். மூலவர் மீது பார்வதி அணைத்து தழுவிய தடம் இருப்பதை இப்போதும் காண முடியும்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன் பூஜித்த மணல் லிங்கமே இங்கு மூலவராக உள்ளது. இவரை ‘ஏகாம்பரேஸ்வரர்’, ‘ஏகாம்பரநாதர்’ என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள மாமரம், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் சாய்ந்ததால், அந்த மரத்தின் ஒரு பகுதியை ஓரிடத்தில் நட்டுவைத்தனர். அது தளிர்த்து இப்போது பெரிய மரமாக காட்சியளிக்கிறது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என நான்கு சுவை கொண்ட கனிகளைத் தரும் தெய்வீக மரமாக இது பார்க்கப்படுகிறது.
ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக வழிபாடு செய்த சகஸ்ரலிங்கமும், அஷ்டோத்ர லிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது.
மூலவரின் கருவறைக்கு எதிரே ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதே போல் ஸ்படிகத்தால் ஆன நந்தியும் காணப்படுகிறது. இந்த லிங்கத்தையும், நந்தியையும் வணங்கினால், பொலிவான தோற்றம் பெறலாம் என்பது நம்பிக்கை.
9 நிலை கொண்ட பிரமாண்டமான ராஜகோபுரம் இந்த கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ‘விகடசக்ர விநாயகர்’ என்ற பெயரில் கணபதியும், ‘மாவடி கந்தர்’ என்ற திருநாமத்தில் முருகப்பெருமானும் அருள்கின்றனர்.
மூலவரின் கருவறைக்கு பின்புறம் உள்ள பிரகாரத்தில் மாமரம் உள்ளது. இதன் அடியில் சிவன், அம்பாள் அமர்ந்தநிலை திருவுருவம் உள்ளது. இதனை திருமணக்கோலம் என்கிறார்கள்.
ஏகாம்பரநாதர் தனிச் சன்னிதியில், கண்ணாடி அறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். 5 ஆயிரத்து 8 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது.
பெருமாள் சன்னிதி
இந்த சிவாலயத்தில், பெருமாளுக்கு தனிக் கோவில் இருக்கிறது. அவருக்கு ‘நிலாத்துண்ட பெருமாள்’ என்று பெயர். இது திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, கூர்மமாக இருந்து மந்தர மலையைத் தாங்கிக்கொண்டிருந்த பெருமாளுக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்தது. அந்த வெப்பம் நீங்குவதற்காக ஈசான பாகத்தில் தியானம் செய்தார். அப்போது சிவனுடைய சிரசில் இருந்த சந்திரனின் ஒளிபட்டு, பெருமாளின் வெப்பம் நீங்கியது.