திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.
திருவானைக்காவல் மூலவர் ஜம்புகேஸ்வரர், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரி.
வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள். எனவே, பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.
இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார். உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது. அம்பாள் சாந்த சொரூபியானாள். ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார். எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.
ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம். இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும். மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.