திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. மேலும் அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மற்றும் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களுடனும், சமயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும் வாணவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.
இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் சோபனபுரம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று பூச்சொரிதலுக்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. இதையொட்டி சோபனபுரம் பகுதியில் உப்பிலியபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, சங்கிலி பறிப்பு போன்றவை நடைபெறாமல் தடுக்கும் வகையில், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.