ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன நிகழ்வுக்கான புனித நீரை, தங்க குடத்தில் கோவில் யானை ஆண்டாள் சுமந்து வந்தது. இந்த நிகழ்வை ஒட்டி தாயார் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கும், அதனைத் தொடர்ந்து தாயாருக்கும் நடத்தப்படும். ரெங்கநாதருக்கு திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமான இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேம் நடைபெற்றது. இதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆறு படித்துறையில் இருந்து தங்ககுடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் கோயில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் அங்கில்கள் சாற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி தாயார் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.