நிறைய கோவில்களில் நாம் ஹனுமனை வாலில் மணியுடன் கண்டிருப்போம். அவரது வாலில் மணி எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
தனது தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதா இருவரையும் அழைத்துக் கொண்டு வனவாசம் புறப்பட்ட ராம பிரான் தென் திசைக்கு வந்ததும், அங்கே இராவணன் தேவி சீதையை கடத்திச்சென்றதும் அனைவரும் அறிந்ததே.
சீதா தேவியை மீட்க இலங்கைக்கு போர் செய்ய, வானரப்படையைத்திறட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீ ராமர். வனங்களில் பல வகையான வானரங்கள் இருந்தன. அதில் “சிங்கலிகா” என்ற வகை வானரம் மிகவும் குள்ளமாக இருக்கும். ஆயிரம் வானரங்கள் இந்த “சிங்கலிகா” வகையைச் சேர்ந்தவை.
இவை எப்படிப்பட்ட போர் புரியும்?
“கூட்டமாகச் சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து நகங்களால் பிராண்டியும் பற்களால் கடித்து குதறியும் போரிடும்.”
போருக்கு புறப்படும் வானர வீரர்களை வலிய அனுப்பிய அவர்கள் குடும்பத்தினர் கண்களில் கண்ணீர், உறவினர்கள் போர் முடிந்து பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்று கவலையில். இதை கவனித்த ஸ்ரீ ராமர் அவர்களிடம், யாரும் கவலை கொள்ள வேண்டாம் படைவீரர்கள் அனைவரையும் பத்திரமாக திரும்பி கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.
https://www.youtube.com/@SivNews23
போர் தொடங்கியது கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது ராவணனின் படையில் பல முக்கிய வீரர்களும் படைத்தலைவர்களும் மடிந்து விழுந்தனர். வேறு வழி இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிட வைத்தான். உருவத்தில் ராட்சசனை போல் இருந்தாலும் மெல்லிய குணமுடைய கும்பகர்ணன். அவன் தன் அண்ணன் ராவணனிடம், சீதையை திரும்ப ராமனிடம் ஒப்படைத்து விடும் படி கூறினான்.
ராவணன் அதை ஏற்க மறுத்து விட்டான். அண்ணனின் வார்த்தையை மறுக்க முடியாத தம்பி கும்பகர்ணன் போர் புரிய தொடங்கினான்.
அவனைப் போல் அவனது தேர் மிகப்பெரியது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தது. போர் தொடங்கி சிறிது நேரத்திலே கும்பகர்ணன் உயிர் ராம பானத்தால் பறிக்கப்பட்டது. தேரிலிருந்து கீழே விழும் போது அவனது கை பட்டு தேரிலிருந்து ஒரு மணி கீழே போரிட்டு கொண்டிருந்த குட்டி வானரங்கள் (“சிங்கலிகா”) மீது விழுந்து அவர்களை மூடியது. திடீரென்று எதையோ வைத்து தங்களை மூடிவிட்டது போல் உணர்ந்த அந்த வானரங்கள் பயந்துவிட்டன. உள்ளே ஒரே இருட்டு. மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. அவர்களின் ஒரு வானரம், “எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு” “ராம் ராம்” என்று தியானம் செய்யுங்கள் ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் காப்பாற்றுவார்’ என்றது. அனைத்து வானரங்களும் தியானம் செய்தனர்.
இறுதியில் போரில் ராவணன் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அதற்கு முன் வானர வீரர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்களா? என்று சுக்ரீவரை பார்த்து வர சொன்னார்.
சுக்ரீவரும் அப்படியே செய்தார். அதில் ஆயிரம் சிங்கலிகாக்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர், ஆஞ்சநேயரை நீயும் என்னுடன் வா. அந்த ஆயிரம் வீரர்களை தேடுவோம் என்றார் ராமர். போர்க்களத்தில் நடந்தார்கள் பல இடங்களில் மடிந்து கிடந்த வீரர்கள், உடைந்து கிடந்த தேர் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் கிளறி பார்த்தனர் சிங்களிகர்கல் கிடைக்கவில்லை.
ஒரு இடத்தில் ராமர் நின்றார், ஹனுமனை பார்த்து, அங்கே பார் ஒரு பெரிய மணி தெரிகிறது. கவனி என்றார். ஹனுமந்தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினார். சஞ்சீவினி மலையை ஒரு கையால் தூக்கிய இவருக்கு இது ஒரு பொருட்டா…
மணியை தூக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்காளிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகோப்பியபடி ராம நாமம் ஜெபித்துக் கொண்டிருந்தனர். பல மணி நேரத்திற்கு பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்த வானரங்கள். எதிரே ஸ்ரீ ராமரும் அனுமரும் நின்று கொண்டிருந்ததை கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர், ஸ்ரீ ராமர் அனுமனைக் கண்டு கூறினார், வாலில் பளபளக்கும் மணியுடன் நீ நிற்கும் இந்த காட்சி மிகவும் சுந்தரமாக உள்ளது. இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார்.
ஜெய் ஸ்ரீ ராம்!
சிவாய நம!