ஜூலை 13 ஆம் தேதி, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர் கோவிலை போன்று, ஆடி பிரம்மோற்சவம் நடக்கும். இதன்படி ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தி. ஜூலை 13 ஆம் தேதி காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் கருடகொடி ஏற்றப்பட்டு விழா துவங்கும். மாலை பெருமாள், மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்திலும், தினமும் காலை, மாலை சிம்மாசனம், சிம்ம, சேஷ, அனுமன் வாகனங்களில் வீதி உலா வருவார். ஜூலை 16 ஆம் தேதி கருட வாகனத்தில் பரமபதநாதனாக அலங்காரமாகிறார். ஜூலை 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளுவார்.
இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் ஆண்டாள் மற்றும் பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் இரவு பூப்பல்லக்கிலும், ஜூலை 20 ஆம் தேதி காலை நவநீத கிருஷ்ணன் திருக்கோலத்திலும், இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் அருள் பாலிக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆடி தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ரத வீதிகளில் வலம் வருகிறார். தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும்.