திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு நடராஜர் & சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகாலம் என அழைக்கப்படும், தை மாதம் முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களில், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில், ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர், அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில்
ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு பால், மஞ்சள், விபூதி, அபிஷேகம் நடந்தது.
சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் நடராஜர் சுவாமி, சிவகாமி அம்மனுக்கு அனைத்து வித சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சுவாமிகள் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டன. சுவாமிகள், 4 வீதிகளில் திருவீதி உலா நடக்க உள்ளது.
வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயில்
கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை டைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன்,பால், தயிர், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மலர் மாலைகள், வில்வ இலை மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது. பின்னர் சாமி கோபுரம் தரிசனத்திற்கு பின்னர் திரு வீதி உலாவுக்கு மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சொக்கலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடப்பதையொட்டி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன் பாளையத்தில் சொக்கலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று காலை நடக்கும் கும்பாபிஷேக விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் கடந்த ஏழாம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று கும்பாபிஷேக விழாவை ஒட்டி அதிகாலை, 3.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, 108 மூலிகை பொருட்கள், ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை, 5.00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 5.30 மணியிலிருந்து, 6.30 மணிக்குள் ராஜகோபுரம் முதல் அனைத்து விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அன்னதானம், காலை, 10.00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, தேங்காய், பழம், பட்டாடைகள், மலர்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை சீர்வரிசையாக சொக்கலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.