“கன்னியாகுமரி கடற்கரையில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை அனைத்துப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக இருக்கும் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிணறு.”
குமரி மாவட்டத்திற்கு கன்னியாகுமரி எனப் பெயர் வர காரணம், சிவபெருமானை அடைவதற்காககபார்வதி தேவி, கன்னியாக நின்று தவம் செய்த முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாகக் குமரிக் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை விவேகானந்தர் தவம் புரிவதற்கு முன்பு சிவன் பாத பாறை என அழைக்கப்பட்டதாக வரலாற்றுக் கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.
மேலும், குமரி கடற்கரையை ஒட்டி உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தீர்த்த கிணறு அம்மன் சன்னதிக்கு அருகில் இடது புறம் உள்ளது. கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தீர்த்த கிணற்றில் இருக்கும் நீர் உப்பு தன்மை இல்லாமல் இருப்பது ஆச்சர்யம். இந்த கிணற்று நீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியத்திற்கான பிரசாதங்கள் செய்யப்படுகிறது.
இந்தக் கிணற்றுக்கு என்று தனிச் சுரங்கப்பாதை உள்ளது. அதன் மூலமாகக் கோவில் குருக்கள் சென்று புனித நீர் மற்றும் கோவிலுக்குத் தேவையான நீரை எடுத்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்றைத் தரிசனம் செய்து அதில் நாணயங்கள் மற்றும் வெள்ளிக் காசுகளைக் காணிக்கையாகப் போடுவதுண்டு.
இந்தப் பழமை வாய்ந்த கிணற்றின் மீது போடப்பட்டிருந்த இருப்பினாலான பாதுகாப்பு அமைப்புகள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்றப்பட்டு, கிணற்றினுள் பக்தர்கள் போட்ட காணிக்கைகள் சேகரிக்கப்பட்டது.