தற்போதைய உலகத்தில் `நல்லவரா இருக்கிறதே தப்போ’ன்னு நினைக்கிற அளவுக்குத்தான் சூழல் மாறிவருகிறது. அன்றாடம் உழைத்து நேர்மையாக வாழும் ஒருவரைவிட, அநியாயம் செய்து சம்பாதிக்கும் ஒருவரது வாழ்க்கை சுகபோகமாகவும் சகல மரியாதையோடும் இருப்பதுதான் ஆச்சர்யம். அப்பாவி ஒருவனுக்கு நம்பிக்கை துரோகம், பண மோசடி, நில அபகரிப்பு, அவமரியாதை, வீண் வம்புக்கு இழுத்தல் என நாள்தோறும் துன்பப் படுகிறீர்களா! கவலை வேண்டாம். உங்கள் பக்கம் நியாயமிருந்தால் உடனே பொள்ளாச்சிக்குக் கிளம்புங்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது ஆனைமலை. அங்கிருந்து பாய்கிறது உப்பாறு. இந்த ஆற்றின் வடகரையில் அமர்ந்து அருள்புரிந்துகொண்டிருக்கிறாள், மாசாணியம்மன் ஆலயம். இவளே திக்கற்றவருக்கு நீதி அளிக்கும் தேவி. காரணம், இவளே நியாயமற்ற தண்டனையால் பாதிக்கப்பட்டவள் என்கிறது தலவரலாறு. அரசன் ஒருவனின் இரக்கமற்ற தண்டனையால் உயிரிழந்த மாசாணியே தெய்வப் பெண்ணாக மாறி, தன்னை நாடி வந்து நியாயம் கேட்கும் மக்களுக்கு நீதி வழங்குகிறாள்.
சங்க காலத்தில் இப்பகுதியை நன்னன் எனும் வேளிர் மன்னன் ஆண்டுவந்தான். இவரின் காவல் மரமான மாமரம் தெய்வத்துக்கு இணையானது என்பதால் அந்த மரத்தில் இருந்து எதையும் யாரும் பறிக்கக் கூடாது என்பது கட்டளை. ஒருமுறை இப்பகுதிக்கு வந்த கோசர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த காவல் மரத்தின் மாம்பழத்தைத் தின்றுவிட்டாள். விஷயம் அரசனுக்குப் போனது. இதனால் அவளுக்கு மரண தண்டனையை அறிவிக்கிறான் நன்னன். அந்தப் பெண்ணின் உறவினர்கள் எவ்வளவு கெஞ்சியும் தண்டனை நிறைவேறுகிறது.
படுகொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவளைப் போலவே படுத்த வாக்கில் ஓர் உருவம் செய்து அவள் உறவினர்கள் தெய்வமாக வழிபட்டனர். மாங்கனிக்காக உயிர் விட்டவள் மாசாணியம்மன் என்றானாள் என்கிறது தல வரலாறு. அவள் இறந்தபின் கோபம் கொண்டு நீலியாக மாறி, அந்த மாமரத்தை அழித்து அவ்வூரையே பயமுறுத்தினாள் என்றும், மக்களின் வேண்டுதலுக்காக தெய்வமாகிக் காவல் தெய்வமானாள் என்றும் கூறப்படுகிறது.
தாடகையை அழிப்பதற்கு முன்பு ராமர் அம்பிகையின் வழிகாட்டலின்படி ஒரு பெண்ணுருவை உண்டாக்கி அதை அழித்தார் என்றும், அதுவே மாசாணி என்றும் செவிவழிப் புராணச் செய்தியும் உண்டு. மேலும் வெகு காலத்துக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருத்தியை ஒரு தீய சக்தி இரவில் பயமுறுத்தி விரட்டியதாகவும், அவள் மாட்டுச்சாணியை மிதித்து வழுக்கி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய மகாசக்தி அந்தத் தீய சக்தியை அழித்து அந்த கர்ப்பிணிப் பெண்ணைத் தன்னுள் ஏற்றுக்கொண்டு தெய்வமான தாகவும் ஒரு கதை உண்டு.
எப்படியோ இந்த மண்ணில் வாழ்ந்து அநீதியால் பாதிக்கப்பட்ட பெண் ணொருத்தியே தெய்வமாகி இருப்பதால் இவள் ஏழை எளிய பாதிக்கப்பட்ட மக்களின் காவல் தெய்வமாகி நிற்கிறாள் என்பதே நம்பிக்கை.கருவறையில் 17 அடி நீள பிரமாண்ட வடிவுடன் படுத்த கோலத்தில் அருள்புரிகிறாள் மாசாணியம்மன். தெற்கே தலை வைத்துப் படுத்திருக்கும் மாசாணியின் திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், நாகம் போன்றவை காணப்படுகின்றன. தலையில் எரியும் நெருப்பு போன்ற ஜுவாலா மகுடத்துடன் திருமுகம் மேலே நோக்கியபடி காட்சி தருகிறாள். அவளுக்கு முன்னே, அவள் நினைவாக முதலில் நடப்பட்ட நடுகல் ஒன்றும் உள்ளது. மாசாணியின் காலடியில் மகுடாசுரன் என்னும் அசுரனின் உருவமும் உள்ளது. பார்க்கும்போதே சிலிர்ப்பை உண்டாக்கும் இந்த தேவியை ஆடியில் வணங்கினால் ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும் என்பது நம்பிக்கை. இங்கு பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர், மகாமுனியப்பன், பேச்சியம்மன், கும்ப முனீஸ்வரர், கருப்பராயர், சப்த கன்னியர், துர்கை, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதியும் உள்ளன.
இங்குள்ள நீதிக்கல்தான் இங்கு விசேஷம். மாசாணி காலத்தில் இருந்தே இருந்துவரும் இந்தக் கல்லில் முதன்முதலில் மாசாணியின் உறவினர்கள் சத்தியம் செய்து பழி தீர்த்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது இதுவே மக்களின் நீதி வழங்கும் நியாய மேடையாக இருந்தும் வருகிறது எனப்படுகிறது. ஏமாறிப் பொருளை இழந்தவர், குடும்பப் பிரச்னை, சொத்தைப் பறிகொடுத்தவர், நம்பிக்கை துரோகம், பொருளைக் களவு கொடுத்தல், தீமைகளால் பாதிக்கப்பட்டவர் என வருத்தத்தோடு வருபவர்கள், மகாமண்டபத்தில் இருக்கும் நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர் நீதிபெற்று நிம்மதி பெறுகிறார்கள் என்பது இங்குள்ள நடைமுறை. நியாயம் உங்கள் பக்கம் இருந்தால் உங்களைத் தொந்தரவு செய்தவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மாசாணி ஆட்டிப் படைத்துவிடுவாள் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.
மேலும், தங்கள் வேண்டுதலை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி இங்கு கட்டி விட்டாலும், அந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறாள் மாசாணி. இங்கு வந்து வேண்டுதல் நிறைவேறியவர்கள் அடுத்த =90 நாளுக்குள் மாசாணி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு செய்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். இங்கிருக்கும் வேப்ப மரத்தில் மஞ்சள் பூசி, எலுமிச்சைப் பழத்தைத் தொங்கவிட்டு நன்றி செலுத்துகிறார்கள் பக்தர்கள். இவளை நம்பி இங்கு வந்து கையெடுத்துக் கும்பிட்டுவிட்டால்கூடப் போதும். மற்றதை மாசாணியம்மன் பார்த்துக்கொள்வாள் என்றே பக்தர்கள் இவளைக் கொண்டாடு கிறார்கள். தன் பக்தர்கள் துன்பத்தோடு சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்கும் மாசாணி நிச்சயம் பதில் சொல்வாள் என நம்பிக்கையோடு பக்தர்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள். மாசாணிக்கு மிக விசேஷமாக பூக்குண்டம் விழா எனப்படும் தீமிதித் திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பக்தர்கள் தீக்குழியில் இறங்கி வேண்டிக் கொள்வார்கள்.
துக்கம், அச்சம் என்று வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். உடனே சென்று, மாசாணியம்மனை தரிசித்து வாருங்கள். துக்க நிவாரணியாக அவள் இருக்க, நீங்கள் கவலையை விடுங்கள்.
பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே ஆனைமலை தாண்டி 24 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அநேக வாகன வசதிகள் உள்ளன.